புயல் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
அந்த மரத்திற்கு அடியிலே சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தேன். காற்று சுகமாக வீசியது. ஆனந்தமாக இருந்தது என்று சொல்லுவது உண்டு.
காற்று மெதுவாக வீசினால் அது சுகமாகத்தான் இருக்கும். அதுவே புயலாக வீசியது என்றால் அது சுகமாகவா இருக்கும்.
கடற்கரைக்குப் போவதுகூட எதற்காக? காற்று வாங்குவதற்காகத்தான். புயல் வாங்கு வதற்காகவா இல்லை!
புயல் வாங்குவதற்கு கடற்கரைக்குப் போகிறேன் என்று சொன்னால் இவர் புயலை வாங்க முடியாது! புயல் இவரை வாங்கிக்கொண்டு போய்விடும்.
தூக்கிக் கொண்டு போய் கடலிலே போட்டுவிடும். பின்பு தட்டுத்தடுமாறி நீச்சலடித்து கரைக்கு வந்து சேரவேண்டும். காற்று வாங்க போனவர் மூச்சு வாங்க வீட்டுக்கு வந்து சேருவது போல ஆகிவிடும். உயிர் வாழ்வதற்கு காற்று மிகவும் அவசியம்தான்.
அது மெதுவாக இருந்தால் தென்றல் தவழ்கிறது என்போம்! சுமராக இருந்தால் வீசுகிறது என்போம்! புயலாக இருந்தால் சீறுகிறது என்கின்றோம்! வித்தியாசம் என்பது இங்கே வேகத்தை பொறுத்தது. புயல் “நான் இத்தனை மணிக்கு இந்த இடத்திற்கு வரப்போகின்றேன்! எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு வருவதில்லை.
இருந்தாலும் அது வருவதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும். இருந்தாலும் இந்த முயற்சியிலே முழு வெற்றி கிடைத்து விட்டதாகச் சொல்ல முடியாது.
ஆனாலும் சில அறிகுறிகளை வைத்து ஓரளவுக்கு அதைக் கண்டுபிடிக்க முடியும். சில சாதனங்கள் இருக்கிறது அவையெல்லாம் கூட புயல் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அதைக்கண்டுபிடித்துச் சொல்ல முடிகிறது. வேறு சில அறிகுறிகளை வைத்து ஓரளவுக்கு யூகித்துக் கொள்ளலாம்.
கடல் பகுதியிலே வேகமான காற்று உருவாகும். அது காரணமாக உண்டாகின்ற கடல் அலைகள் நான்கு திசைகளிலேயும் சஞ்சரிக்கின்ற சாதாரணமான காற்று அடிக்காத பகுதிகளில் கூட கடுமையான அலைகள் உண்டாகும்.
இதை வந்து ஸ்வெல் (Sweel) என்று சொல்லுகிறார்கள். சாதாரண நாட்களிலே கடலின் உட்பகுதியில் காணப்படுகின்ற இந்த “ஸ்வெல்” பரவி படர்ந்து கடற்கரையோரத்திலேயும் தென்பட ஆரம்பித்தது என்றால் அங்கே புயலை எதிர்பார்க்கலாம்.
அதன் பின்பு மேகங்கள் இருக்கிறதே அதில் பலவகையுண்டு. அதில் சைரஸ் என்பது தான் நார்கள் மாதிரி அமைந்து இருக்கின்ற மேகங்கள். இது வானத்திலே தெரிந்தாலும் அது புயலுக்கு ஒரு அறிகுறி தான்! புயல் மையம் இருக்கிறது அல்லவா அதற்கு செங்குத்தான உயரத்திலே இந்த மேகங்கள் தென்படும்! புயல் தீவிரமாகும் போது சைரஸ் மேகம் வானத்தை முடிக் கொள்ளும். ஆதவன் உதயமாகின்ற நேரம் மறையும் நேரம் இந்த சமயங்களிலே வானம் பிரகாசமான சிவப்பு நிறத்திலே இருக்கும்.
புயல் காற்று நூறாவது மைலிலே வீசுகின்ற போது நாம் இருக்கின்ற இடத்தில் காற்றின் திசையிலே மாற்றம் ஏற்படுகின்றது. காற்றழுத்தம் தீடீரென்று கூடும், குறையும். அடுத்தடுத்து காற்றழுத்தம் குறைந்து கொண்டே சென்றால் புயல் எங்களைத் தேடி வந்துகொண்டு இருக்கிறது என்று அர்த்தம்!
சாதாரணமாக வீசிக்கொண்டு இருக்கின்ற காற்றினுடைய திசை அடிக்கடி மாறும். வேகமும் அதிகரிக்கும். புயல் வருவதற்கு முன்பு உள்ள சூழ்நிலை புழுக்கமாகவும் வறண்டும் இருக்கும். சலனமில்லாத சூனியமாக இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டியது தான். புயலுக்குப் பின் அமைதி என்கின்றோம் அல்லவா அது மாதிரி அமைதிக்குப் பின் புயல். மைக்ரோ- சீஸ்மோ கிராஃப் என்று ஒரு நூதனமான கருவி. கடலில் புயற்காற்றை உண்டாக்குகின்ற சிறிய சலனம் கூட இதில் பதிவாகிவிடும். செயற்கைக் கோள்கள் எல்லாம் இப்போது இதற்கு மிகவும் உயோகம்.
ஒரு வேவு விமானம் பறந்து சென்று சில்வர் அயோடைட்டு குண்டுகளை பொழிந்ததாம். இதனால் காற்றின் சக்தியை 31 சதவீத அளவிற்கு குறைக்க முடிந்ததாம்.என்ன தான் சொல்லுங்க இயற்கையை வெல்வது கடினம் என்று தான் தோன்றுகிறது. உலகத்தை அழிக்கக் கூடிய அணுகுண்டை மனிதரால் தயார் செய்ய முடிகிறது. ஆனால் அழிக்க வரும் புயலைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே. “புயல் வேகம் பொன்னம்பலம்” என்று ஒருவர் இருந்தார். அவர் பேசினாலே இடி இடிக்கிறது மாதிரி இருக்குமாம். அவர் பேச்சை கேட்பவர்கள் எல்லாம் நடுநடுங்கிப் போய்விடுவார்கள்.
அவர் வீட்டிலே சம்சாரத்தைக் கூப்பிட்டு இதோ பாருப்பா புயல் வேகப் பிரசாரத்திற்கு புறப்பட்டுப் போறேன். திரும்பிவர ஒரு வாரத்திற்கு மேலே ஆகும். என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு போனார். ஆனால் புறப்பட்டுப் போன 15 நிமிடத்திலே திரும்பி வந்து விட்டார். அதே வேகத்திலே “என்ன விடயம் என்று கேட்டார் அந்த அம்மா?” “நிஜமாகவே புயல் வரப்போகின்றதாம் அது தான் பேச்சை கான்சல் செய்து விட்டு திரும்பி வந்து விட்டேன்!” என்றார் இவர்!
