பாதுகை – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

சேர் புராண விடயங்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறபோது விஞ்ஞானக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அதைக் கேட்க முயற்சி செய்வது தப்பு, அதனால் அப்படி யாராவது போட்டுக்கொண்டு இருந்தால் அதை கழற்றி வைத்து விட்டு ஆன்மிகக் கண்ணாடி எடுத்து மாட்டிக்கொண்டு அதற்கு பின்னர் இதை கேளுங்கள்.

அப்பொழுது தான் குறுக்குக் கேள்விகள் எல்லாம் கேட்காமல் நீங்கள் இதைக்கேட்க முடியும். நானும் சிறிது துணிச்சலாக உங்களிடம் பேசமுடியும். வைகுண்டத்திலே ஒரு நாள் திருமால் வழக்கத்திற்கு மாறாக ஒருகாரியம் செய்தார். தன்னுடைய பாதுகையை பள்ளியறைக்குள்ளே விட்டுவிட்டு பாம்பணையில் படுத்தார். உடனே அவருடைய திருமுடிக்குக் கோபம் வந்து விட்டது. முடி, பாதுகை எல்லாம் தவம் செய்து அந்தப்பதவியை அடைந்திருந்ததாம்.

திருமுடி பாதுகையை பார்த்து சத்தமிட ஆரம்பித்தது. ஏ! பாதுகையே உனக்கு அறிவு இருக்கிறதா. கண்ட கண்ட இடத்தில் எல்லாம் மிதிக்கின்ற நீ இப்படி படுக்கை அறைக்குள் வரலாமா? போ வெளியே! என்று கத்தியது. பாதுகை இதற்கு பணிவாகப் பதில் சொல்லியது. திருமுடியே நீ சொல்வது சரி தான். இருந்தாலும் நானாக இந்த இடத்திற்கு வரவில்லை. பகவானுடைய திருவடிதான் என்னை இங்கு கொண்டு வந்து உள்ளே விட்டுவிட்டது. இப்படி இருக்கும் போது வீணாக என்னை நீ கோபிக்கின்றாய்.

Defence – Today’s news – Thenkachi Ko. Swaminathan

“எய்தவன் ஒருவன் இருக்கும் போது அம்பை நோகலாமா? இது சரியா” என்று கேட்டது. இதைக் கேட்டதும் திருமுடிக்கு மேலும் கோபம் வந்துவிட்டது. பாதுகையே “நீ மிகவும் அதிகமாகப் பேசுகிறாய்! நீ மிகவும் இழிவான பொருள்! நீ இவ்வளவு தூரம் பேசக்கூடாது”.

இங்கு உள்ளே இருப்பதற்கு உனக்குத் தகுதி கிடையாது. நான் அப்படி என்றால் பெருமாளுடைய தலைக்கு மேல் இருக்கக் கூடிய தகுதி உடையவன். என்னோடு சரிக்குச் சரியாக பேசுவதற்கு கூட உனக்குத் தகுதி கிடையாது. அதனால் இங்கே இருக்காதே. சீக்கிரம் போய் தொலைந்து விடு என்கிறது.

“முடியே எதற்காக இப்படி வீணாகப் பெருமை அடைந்து கொள்கிறாய். எனக்கு என்று தனியாக ஒரு செயலும் கிடையாது. நான் இப்பவும் ஐயன் திருவடியை ஒட்டிக்கொண்டு இருக்கிறவன். அந்தப் பாதத்தை நம்பியவர்களுக்கு நல்லது நடக்கிறது.

அடியவர்கள் எல்லோரும் அடியைத்தான் விரும்புகிறார்கள்.
“அடி சேராய்” என்று தானே பாடுகிறார்கள். அதனால் என்னை இப்படிப் பழித்துப் பேசாதே என்றது பாதுகை. இவ்வளவு நேரமும் இந்த விவகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்த சங்கும் சக்கரமும். திருமுடிப் பக்கம் சேர்ந்து கொண்டு பாதுகையை விரட்ட ஆரம்பித்து விட்டது.

“எப்பவும் உயரத்தில் இருப்பவர்களுக்குத் தான் சப்போர்ட் அதிகமாக இருக்கும்”. உனக்கு என்ன இவ்வளவு திமிர் . பேசாமல் வாயை முடிக்கொண்டு வெளியே போறியா? இல்லையா? என்று அது இரண்டும் கத்துகிறது. பாதுகை நிலமை பரிதாபமாக இருந்தது.

உடனே நாராயணனைப் பார்த்து கருணைக்கடலே நீங்களே இப்படி என்னை உள்ளே கொண்டு வந்து விட்டுவிட்டு அதன் பின்பு அவர்களை விட்டு இப்படிப் பேசச் சொல்வது சரியா? என்று முறையிட்டது. திருமால் உடனே பாதுகையை நீ கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டு முடியை பார்த்துச் சொல்ல ஆரம்பித்தார். “முடியே நீ தற்பெருமையாக பேசி இந்தப் பாதுகையை அவமானப்படுத்தி விட்டாய்”. இதனால் அடுத்து வரும் இராம அவதாரத்தில் 14 வருடங்கள் இந்தப் பாதுகையின் மேலே இருக்கக் கடவது.

“சங்கே சக்கரமே, நீங்கள் இரண்டு பேரும் என் கண்முன்னால் பாதுகையைப் பழித்து பேசி விட்டீர்கள். அதனால் இராம அவதாரத்தில் நீங்கள் இரண்டு பேரும் சத்துருக்கனாகவும் பரதனாகவும் பிறந்து இந்தப் பாதுகையை 14 வருடங்கள் வழிபடக் கடவது. என்று சொல்லி விட்டார். அதனாலே தான் 14 வருடம் பாதுகைக்கு முடிசூட்டி பரதர் விரதம் இருந்து பாதுகையைப் பூசித்து வந்தார்.

“கீழோராயினும் தாழவுரை” என்பது இதன் விளக்கம். “சிறியவர்கள் தானே என்று நினைத்து யாரையும் இகழக்கூடாது” என்பது தான் நாம் இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது. பாதுகையைப் பற்றி நான் உங்களுக்குத் தகவல் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அப்படிச் சொல்லி முடிப்பதற்கு உள்ளே இதோ என் எதிரில் ஒருவர் மிகவும் பக்குவமாக வந்து கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

“நல்ல விடயங்களைக் கேட்பதற்கு நல்லவர்கள் எப்பவும் தயாராகவே இருப்பார்கள்” என்று நாம் நினைப்பதற்கு உள்ளே இவர் பேச ஆரம்பித்தார். அவர் என்னை பார்த்து நீங்கள் சொல்வது சரி தான் இருந்தாலும் நான் உங்களைத் தேடி வந்தது வேறு விடயம். அதுவும் பாதுகை சம்பந்தப்பட்ட விடயம் தான். நேற்றைக்கு நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டு திரும்பும் போது உங்கள் பழைய செருப்பை அங்கேயே விட்டுவிட்டு என்னுடைய புதிய செருப்பைப் போட்டுக்கொண்டு வந்து விட்டீர்கள். உங்களுடையதை மிகவும் பக்தி பூர்வமாக அங்கே இருந்து சுமந்து கொண்டு வந்திருக்கிறேன். ஏன் என்றால் காலிலே மாட்டமுடியவில்லை காதறுந்து போய் விட்டது சார்.
நான் பரதன் இல்லை

Comments are closed.