பக்தியும் பகல் வேஷமும்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
ஒரு ஊரிலே ஒரு சாமியார் இருந்தார். அவரைச்சுற்றி ஏகப்பட்ட கூட்டம். கடவுளைப்பற்றி அந்த சாமியார் நிறைய கதை எல்லாம் சொல்லுவார். சுற்றி இருக்கின்ற கூட்டமும் அதை ஆவலாகக் கேட்டுக் கொண்டிருக்கும். நமது ஊரிலே பக்தர்களுக்கா பஞ்சம். இதைக் கேட்ட கடவுளுக்கே மனதுக்குள்ளே மிகவும் பெருமையாக இருந்தது. நமது பெருமையை எடுத்துச் சொல்வதற்கும் பூலோகத்திலே நிறையப் பேர் இருக்கிறார்கள். அதைக் கேட்பதற்கும் நிறையப் பேர் இருக்கிறார்கள். மக்களிடம் கடவுள் பக்தி நிறைய இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தார்.
சரி நேரிலே அங்கே சென்று எல்லோரையும் பார்த்து பேசிவிட்டு வரலாம் என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டு பூலோகத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் இங்கே வந்து சேர்ந்த நேரம் ரொம்ப நல்ல நேரம். ஒரு கோயிலிலே ஏதோ விஷேசம்.அங்கே அந்த சாமியார் ஏதோ பக்திப் பிரசங்கம் செய்து கொண்டு இருக்கிறார். மக்கள் கூட்டமாக உட்கார்ந்து அதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கடவுள் அப்படி இருப்பார் இப்படி இருப்பார் என்று அந்த சாமியார் ஏதோ கடவுளை நேரிலே பார்த்த மாதிரி வர்ணித்துக் கொண்டு இருந்தார். கூட்டம் முடிந்தது. மக்கள் எல்லோரும் வெளியே வந்தார்கள்.
கோயிலுக்கு வெளிப்பக்கத்தில ஒரு அரசமரம். அந்த அரச மரத்திற்கு அடியில் உண்மையான கடவுள் நின்றுகொண்டு இருக்கிறார். உலகத்தைச் சுற்றிப் பார்க்க வந்தவர். வெளியிலே வந்த ஒரு பக்தர் அவரைப் பார்த்தார். ஆச்சரியப்பட்டார். அவர் கடவுளிடம் சென்றார். பலே! கடவுளைப் போலவே வேஷம் போட்டிருக்கிறியே. சபாஷ் வேஷப் பொருத்தம் மிகவும் நன்றாக இருக்கின்றது என்றார். கடவுளுக்கு தூக்கி வாரிப்போட்டது. என்னப்பா இது இப்படி சொல்கிறாய்? நான் தான் கடவுள் என்றார் அவர்.
இதோ பார் இப்படி என்னிடம் சொன்னதோடு நிறுத்திக் கொள். சத்தம் போட்டுச் சொன்னால் உனக்கு மூளைக் கோளாறு என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். அப்புறம் உன் மீது கல்லை எடுத்து எறிவார்கள். அதன் பின்பு என்னை கோபித்துக் கொள்ளாதே என்று எச்சரித்தார் பக்தர். இதோ பாருப்பா நான் சொல்வதைக் கேளு என்று இவர் ஆரம்பித்தார். நீ சொல்லுவதை நான் கேட்பதை பிறகு பார்ப்போம். முதலிலே நான் சொல்வதை நீ கேள். உள்ளே இருந்து எங்கள் சாமியார் வருவதற்குள்ளே நீ இடத்தை காலி பண்ணி விடு இல்லை என்றால் விடயம் விபரீதமாகப் போய்விடும் என்றார் இவர்.
யாரு? உங்கள் சாமியார் தானே வருகிறார். வரட்டும் அவருக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். ஏன் என்றால் நான் எப்படி இருப்பேன் என்பதை அவர் தானே தினமும் உங்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டு இருக்கின்றார் என்றார். இது ஏதுடா வம்பாய்ப் போய்விட்டதே! என்றார் அந்த பக்தர்.கொஞ்ச நேரம் பார்த்து விட்டு சரி வாருங்கள் போகலாம் என்று பக்தர்களும் கலைந்து போய்விட்டார்கள்.
அந்த ஒரு பக்தர் மட்டும் உள்ளே போய் சாமியாரிடம் விபரத்தைச் சொன்னார். சாமி யாரோ ஒருவன் கடவுள் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு வந்து நின்று குழப்பம் செய்கிறான் என்றார். சாமியார் கோபமாக வெளியே வந்தார். ஏம்பா இப்படி வந்து இங்கே கலாட்டா செய்கிறாய் பேசாமல் போய்விடு என்றார்.
இவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவர் கேட்கவில்லை! கடைசியிலே ஒரு அறையிலே இவரைத் தள்ளி கதவைச் சாற்றி பூட்டிவிட்டார்கள். கடவுளுக்கு மிகவும் சங்கடமாய்ப் போய்விட்டது. கண்ணை மூடிக்கொண்டு போய் பேசாமல் உட்கார்ந்து விட்டார். நடுராத்திரியில் அந்தச் சாமியார் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். கடவுள் காலிலே விழுந்தார். கடவுளே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! காலையிலேயே நீங்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். நீங்கள் தான் நிஜக் கடவுள் என்று நான் சொல்லியிருந்தால் ஜனங்கள் என்னையும் மெண்டல் கேஸ் என்று நினைத்து உங்கள் கூடவே சேர்த்து உள்ளே தள்ளியிருப்பார்கள். அது தான் அப்படி நடந்து கொண்டேன் என்றார்.
கடவுள் அதன் பின் ஒரு வழியாக மேலே வந்து சேர்ந்தார். வந்த பின்பு கொஞ்சம் கவலையோடு உட்கார்ந்து இருந்தார். பக்கத்திலே இருந்த அவருடைய தேவி ஏன் இன்னமும் கவலையோடு இருக்கிறீர்கள். பூலோகத்திலே பக்தர்கள் தானே அப்படி உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். குருமார்கள், சாமியார்கள் உங்களைப் புரிந்து கொண்டு தானே இருக்கிறார்கள். என்று சொன்னார் தேவி.
அந்தச் சாமியார் தான் என்னுடைய கவலைக்குக் காரணம். புரியாத பக்தர்கள் என்னைப் போய்விடு என்று சொன்னார்கள். அது ஒன்றும் பெரிது இல்லை.
புரிந்து கொண்ட அந்தச் சாமியாரும் என்னை உடனே புறப்பட்டு போய்விடு என்று சொன்னது தான் கவலையாக இருக்கிறது. ஏன் என்னை போகச் சொல்லுகின்றாய் என்று கேட்டேன். அதற்கு அந்த சாமியார் என்ன சொன்னார் தெரியுமா? என்ன சொன்னார்? என்று கேட்டார் தேவி! நீங்கள் இங்கே வந்து விட்டால் எங்கள் பிழைப்பு கெட்டுப் போய்விடும் என்றார் சோகமாக!
