அறிவு பலம் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

இந்தக் காலத்தில் சின்னப் பிள்ளைகளை சமாளிப்பது மிகவும் கடினம். ஒரு நாள் ஒரு பத்து பதினைந்து பாடசாலைப் பிள்ளைகள் ஏதோ ஒரு ஒலிப்பதிவுக்காக இங்கே வந்திருந்தார்கள். வழியிலே நான் மாட்டிக் கொண்டேன். ஒரு சின்னப் பையன் நிமிர்ந்து பார்த்தான். சார் இன்று ஒரு தகவலை என்னை மாதிரி சின்னப் பிள்ளைகள் தான் கேட்கிறோம். அதனாலே எங்களுக்குப் பிடிக்கிற மாதிரி ஏதாவது கதை சொல்லுங்கள் சேர் என்று சொன்னான்.

அப்பிடித்தானே சொல்கிறேன். இருந்தாலும் பல சமயம் அது எங்கள் பாடசாலை யையே ஞாபகப்படுத்துகிறது என்றான். அது எப்படி என்றேன். எங்கள் வகுப்பிலே வாத்தியார் பாடம் நடத்துவதற்கும் நீங்கள் தகவல் சொல்லுவதற்கும் பல சமயங்களிலே வித்தியாசம் தெரிவதில்லை என்றான். இதிலிருந்து அவன் என்னை கௌரவப்படுத்துகின்றானா இல்லை காலை வாருகின்றானா என்று ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ஒரு வழியாக சமாளித்து அவர்களை அனுப்பி வைத்தேன்.

அப்படியான பிள்ளைகளுக்கு இன்று ஒரு எளிமையான ஒரு கதை சொல்லுவோம். ஒரு பாடசாலையிலே வகுப்பு முடிந்து மணியடித்து விட்டது. பிள்ளைகளெல்லாம் சந்தோசமாக சத்தம் போட்டுக் கொண்டு வெளியிலே ஓடி வந்தார்கள். ஒரு பெரியவர் அந்த வழியாக போய்க்கொண்டு இருந்தார். அவரின் காலிலே புதிதாக வாங்கிய செருப்பைப் போட்டிருந்தார். பார்க்கும் பொழுது அழகாக இருந்தது. ஒரு குறும்புக்கார சிறுவன் அதைக் கவனித்தான். இவரை எப்படியாவது ஏமாற்றி அந்த செருப்பை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் விட வேண்டும் என்று நினைத்தான். மற்றச் சிறுவர்களுடன் இணைந்த ஒரு திட்டம் போட்டான்.

இன்னொரு சிறுவன் அந்தப் பெரியவரை ஏமாற்றுவதற்கு ஒரு யோசனை சொன்னான். அதாவது அவரை ஒரு மரத்திலே ஏறச் சொல்லுவோம். அவர் செருப்பை கழற்றிவிட்டு மேலே ஏறுவார். உடனே நாம் அதைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போவோம் என்று சொன்னான். சரி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். உடனே எல்லோரும் மிகவும் நல்ல பிள்ளைகள் மாதிரி அந்த பெரியவரிடம் சென்றார்கள். ஐயா எங்களாலே இந்த மரத்தில் ஏற முடியவில்லை. நீங்கள் பெரியவர். உங்களுக்கு அனுபவம் இருக்கும். நீங்கள் ஒரு தடவை ஏறிக்காட்டினீர்கள் என்று சொன்னால் நாங்கள் கற்றுக்கொள்வோம் என்று சொன்னார். பெரியவர் சரி என்று ஒத்துக் கொண்டார் . ஆனால் மனதிற்குள் ஒரு சந்தேகம். ஏன் திடீர் என்று இந்தப் பிள்ளைகள் கேட்கிறார்களே என்று. ஒரு சிறுவன் காலிலே இருக்கிற காலனியையும் பெரியவரையும் கவனிப்பதை அவர் கவனித்து விட்டார். சரி இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டார்.

சரி பிள்ளைகளே உங்களுக்கு மரம் ஏறித் தானே காட்ட வேண்டும். சரி இதோ பாருங்கள் என்று கூறினார். சிறுவர்களுக்கு மனதிலே ஒரு சந்தோசம் பெரியவர் ஏமாந்துவிடப்போகிறார் என்று. ரொம்ப அக்கஸ்ரீறையாக அவரைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். செருப்புகளை கழற்றினார் தனது இடுப்பிலே செருகிக் கொண்டார். பின்பு மரத்திலே ஏற ஆரம்பித்தார்.

சிறுவர்கள் திகைத்துப் போய் நின்று விட்டார்கள். தங்களது திட்டம் நிறைவேறாது போல இருக்கிறதே என்று எண்ணி ஒரு பையன் அவரைப் பார்த்து ஐயா மரத்தில் ஏறும் போது ஏன் செருப்பை கூடவே எடுத்துக் கொண்டு செல்கின்றீர்கள்.

அங்கே என்ன நடை பாதையா இருக்கிறது. செருப்பை கீழே போட்டுவிட்டு போங்கள் என்று கூறினான். அதற்கு பெரியவர் நீ சொல்வது மாதிரி செருப்பை கீழே போட்டுவிட்டு போகலாம். ஒரு வேளை மரத்தின் மேலே நடைபாதை இருந்தால் என்ன செய்வது. அதனால் தான் எச்சரிக்கையாக அதை எடுத்து கொண்டு போகின்றேன் என்று கூறினான். அதனாலே புத்திசாலிகளை ஏமாற்றுவது கஸ்டம். இதை சிறு பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். உடம்பு பலம் மட்டும் இருந்தால் போதாது. அறிவு பலமும் வேண்டும். அதை வளர்த்து கொள்ளவேண்டும்.

ஒரு குரங்கு ஒரு மரத்தின் மேலே உடகார்ந்து இருந்தது. அந்த மரத்திற்கு அடியிலே ஒரு சிங்கம் நின்றது. சிங்கத்திற்கு ரொம்ப பசி. ரொம்ப சாமர்த்தியமாக அந்தக் குரங்கைப் பார்த்து ஏன் அதிக நேரமாக அங்கேயே உட்கார்ந்து இருக்கின்றாய். இங்கே கீழே இறங்கி வா. விளையாடலாம் என்றது.

குரங்கு சொன்னது நான் தான் கீழே வந்தால் நீ என்னை கடித்து தின்று விடுவாயே அதனால் நீ உனது வாயை மூடிக் கட்டிக் கொள். அதோடு உனது கால்களையும் கட்டிக் கொள் என்றது. சிங்கம் அதே மாதிரி செய்தது. தனது வாயையும் கால்களையும் சேர்த்து கட்டிக் கொண்டது. அதன் பின்பு அந்தக் குரங்கு கீழே இறங்கி வந்து சிங்கத்திடம் சென்றது. அப்போது அதன் உடம்பு நடுங்கியது. ஏன் நடுங்குகிறது என்றது சிங்கம். நான் நடுங்கவில்லை. உணர்ச்சி வசப்படுகின்றேன் என்றது குரங்கு. ஏன் என்று கேட்டது சிங்கம். முதல் முறையாக இன்று தான் சிங்கத்தின் கறியை சாப்பிட்டு பார்க்கப் போகின்றேன் அதனாலே தான் அப்படி என்றது குரங்கு.

Knowledge is power – Today's information – Thenkachi Ko. Swaminathan

Comments are closed.