பணம் பாதகம் செய்யும்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு ஊரிலே ஒரு பெரியவர் இருந்தார். அந்த ஊரிலே இருந்த இளைஞர்கள் சிலரை கூப்பிட்டு வைத்து உபதேசம் செய்தார். பணத்தை அறவழியிலே தேட வேண்டும். தகாத வழியிலே தேடுகின்ற பணம் வந்த வழியிலே திரும்பப் போய்விடும் என்றார். அது மட்டுமில்லை. பணம் நண்பர்களை கூட விரோதிகளாக மாற்றிவிடும் என்றார்.

இளைஞர்களிலே ஒருவர் எழுந்தான். விபரம் தெரியாமால் பேசாதீர்கள் பெரியவரே என்றான். அவர் நிமிர்ந்து பாரத்தார். இதோ பாருங்கள் நாங்கள் நான்கு பேர் இருக்கின்றோம். நாங்கள் நான்கு பேரும் இணைபிரியாத நண்பர்கள். எந்தப் பணமும் எங்கள் நட்பை எதுவும் செய்து விட முடியாது என்று சவால் விட்டான். மற்றவர்களும் தலையை ஆட்டினார்கள். பெரியவர் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே போய்விட்டார். அதற்கு பின் ஒரு நாள். வழக்கம் போல இந்த நான்கு நண்பர்களும் ஒரு மலையடிவாரத்திலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்திலே ஒரு மலைக்குகை இருந்தது. அதன் உள்ளே ஒரு சாமியார் தியானம் செய்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் கண்ணைத் திறந்து பாரத்தார். அவ்வளவு தான். அலறியடித்துக் கொண்டே வெளியே ஓடிவந்தார். சாவு என்னைத் துரத்துகின்றது என்று சொல்லிக்கொண்டே ஓடினார். இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த சாமியார் இப்படி கத்திக்கொண்டு ஓடுகின்றார் என்று நினைத்துக் கொண்டே குகைக்குள் ஓடிப்போய்ப் பார்த்தார்கள்.

அங்கே போய்ப் பார்த்தால் ஒரு ஆச்சரியம். விலை மதிக்க முடியாத வைரங்கள், நகைகள், தங்கக்காசுகள் குவியல் குவியலாகக் கிடந்தது. இவ்வளவு பெரிய செல்வத்தைப் பார்த்து விட்டு இந்த ஆள் இப்படி அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றாரே என்று நினைத்து அவருக்காக பரிதாபப்பட்டார்கள்.அங்கே கிடந்த நகைகளையும் காசுகளையும் ஆசையாகக் கையிலே அள்ளிப் பார்த்தார்கள். அந்த நான்கு பேரும் சரி இதை இப்படி நான்கு பங்காகப் போட்டு ஆளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கேட்க ஆரம்பித்தான் ஒரு ஆள். நான் இதை முதலிலே பார்த்தேன். அதனாலே எனக்குக் கொஞ்சம் அதிகமாக கொடுப்பது தான் முறை என்றான் ஒருவன்.

உனக்கு முன்னாலே நான் தான் பார்த்தேன் என்றான் இன்னொருத்தன். கொஞ்ச நேரம் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ஆள்ஆளுக்கு அங்கேயிருந்த இரும்புக் கம்பிகளை எடுத்துக் கொண்டார்கள். அடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அதிலே ஒரு ஆள் இறந்து விட்டான். இன்னொருவனுக்கு பலமான காயம். இறந்தவனைப் பார்த்ததும் மற்ற மூன்று பேரும் சமரசத்திற்கு வந்தார்கள்.

சரி நடந்தது நடந்து விட்டது. இனிமேல் நடக்க வேண்டியதை யோசித்துப் பார்ப்போம் இவன் இறந்து போனது யாருக்கும் தெரியக்கூடாது. இவனை இங்கேயே புதைத்து விடுவோம். நாங்கள் மூன்று பேரும் இதை பங்கு போடுவோம் என்கின்ற முடிவுக்கு வந்தார்கள்.

அதற்குள்ளே அவர்களுக்க பசி ஆரம்பித்து விட்டது. ஒருவனை சாப்பாடு வாங்குவதற்கு அனுப்பினார்கள். ஆரம்பத்திலே அவன் தயங்கினான். திரும்பி வருவதற்குள்ளே இவர்கள் இரண்டு பேரும் இருக்கிறதை சுருட்டிக்கொண்டு ஓடிப்போய்விட்டால் என்ன செய்வது என்கின்ற தயக்கம் இருந்தாலும் அவர்கள் இரண்டு பேரும் உறுதி சொல்லி அனுப்பினார்கள். இப்படியெல்லாம் செய்யமாட்டோம். தைரியமாக போய் வா என்று. அவன் சென்றான். அதற்கு பின் என்ன நடந்தது தெரியுமா? இங்கே அடிபட்டு கிடக்கின்றானே அவனுக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. தண்ணீர் தண்ணீர் என்று கத்தினான். பக்கத்திலே இருந்தவன் அதை கண்டுகொள்ளாமல் போய்விட்டான். அவன் இறந்து விட்டால் ஒரு பங்கு குறையுமே என்கின்ற நினைப்பு.

சாப்பாடு வாங்கப் போனவன் திரும்பி வந்தான். இவன் எப்படி இறந்து போனான் என்று கேட்டான். அடுத்தவன் பார்த்தான். இப்படித் தான் இறந்து போனான் என்று சொல்லி அவன் தலையிலே இரும்புக் கம்பியாலே ஓங்கி அடித்தான். அவ்வளவு தான் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தவனும் இறந்து விட்டான். இப்போது இருக்கின்றது ஒரே ஆள். அப்பாடா தொல்லை விட்டது என்று நினைத்தான். அவசர அவசரமாக அவன் வாங்கிக் கொண்டு வந்த சாப்பட்டை சாப்பிட்டான். நகைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பினான். அவ்வளவு தான் தலை கிறு கிறு என்று சுத்தியது. கண் இருண்டது. மயங்கி கீழே விழுந்தான். அவனும் இறந்து விட்டான்.

என்ன நடந்தது தெரியுமா? சாப்பாடு வாங்கப் போனவன் அதிலே விஷத்தைக் கலந்து கொண்டு வந்திருக்கின்றான் அவனைக் கொல்லுவதற்காக. கடைசியிலே அந்தச் செல்வம் கேட்பாரற்றுக் கிடந்தது. அதற்கு போட்டி போட்டவர்கள் அதை அனுபவிக்க முடியாமல் அழிந்து போனார்கள். பணம் நண்பர்களைக் கூட விரோதிகளாக மாற்றிவிடும் என்று பெரியவர் சொன்னாரே. அது எந்தளவு உண்மையாகப் போய்விட்டது பார்த்தீர் களா?

வாழ்க்கைக்கு பணம் அவசியம் தான் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் அதை முறையாக சம்பாதிக்க வேண்டும். முறையாகப் பயன்படுத்த வேண்டும். அது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

என் நண்பண் ஒருவனிடம் இந்தக் கதையைச் சொன்னேன். சொல்லிவிட்டுக் கேட்டேன். நாங்கள் இரண்டு பேரும் கடற்கரைக்குப் போவதாக வைத்துக் கொள்ளுவோம். அங்கே மணலிலே ஒரு தங்க மோதிரம் இருக்கிறது. அதை நான் பார்க்கின்றேன். எடுத்து உன்னிடம் கொடுக்கின்றேன். அந்த மோதிரம் எங்களுடைய ஆழ்ந்த நட்பைப் பிரித்து விடும் என்று நினைக்கின்றாயா? என்றேன்.

பிரிக்கின்ற அளவுக்கு நீங்கள் நடந்து கொள்ள மாட்டீர்கள் என்றார். எப்படி? என்று கேட்டேன். உங்கள் கண்ணிலே அது தெரிந்தால் அதன்பின் அதைப்பற்றி என்னிடம் வாயைத்திறந்து சொல்லவே மாட்டீர்கள். அப்புறம் எப்படி எமக்குள்ளே சண்டை வரும் என்றார்.

Money is harmful! – Today's news – Thenkachi Ko. Swaminathan

Comments are closed.