ஞானம் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அந்த ராஜாவிற்கு ஒரு ராணி. அவர்கள் அரண்மனைக்கு புகழ்பெற்ற ஞானிகள் எல்லாம் வருவது வழக்கம். அவர்களுடைய உபதேசங்களையெல்லாம் அந்த ராணி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். அதனுடைய விளைவு. அவரும் ஒரு ஞானி ஆகிவிட்டார்.
ஞானி மட்டுமில்லை. தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டு ஆகாயத்திலே பறக்கின்ற சித்தி அவருக்குக் கிடைத்து விட்டது. நினைத் தால் பறக்கலாம். அப்படிப்பட்ட சக்தி வந்து விட்டது.
ராஜா பார்த்தார் உடனே ராணியிடம் போனார். இதோ பார் நானும் உன்னை மாதிரி ஞானி ஆக வேண்டும். எனக்கும் ஏதாவது உபதேசம் செய் என்று கேட்டுக் கொண்டார். நீங்கள் ஞானி ஆக வேண்டும் என்றால் எல்லாவற்றையும் துறக்க தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விடுவதற்கான வைராக்கியம் இன்னும் உங்களுக்கு வரவில்லை என்றார் ராணி. சரி என்று பேசாமல் விட்டுவிட்டார் ராஜா.
சிறிது காலம் போனது. அந்த ராஜா காட்டிற்கு போய் தவம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் ராணிக்கு அதில் விருப்பமில்லை. அதனாலே அவர் சம்மதிக்கவில்லை.
ராஜா பார்த்தார் அவருக்கா வழி தெரியாது. அவர் சொல்லாமல் ஒரு நாள் இரவு புறப்பட்டு காட்டிற்குப் போய்விட்டார். ராணி பார்த்தார். அது தான் ஆகாயத்திலே பறக்கின்ற சக்தி அவருக்கு கிடைத்து விட்டது. இளம் முனிவர் மாதிரி தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண் டார். புறப்பட்டுப் போனார் காட்டிற்கு. ராஜா எங்கே இருக்கின்றார் என தெரிந்தது.
நேராக ராஜா முன்னாலே போய் இறங்கினார் அந்த இளம் முனிவர். அது தான் அந்த ராணி. ராஜா தன் எதிரிலே இளம் முனிவரைப் பார்த்தார். வணங்கினார். நான் நீண்ட காலமாக தவம் செய்கின்றேன். ஆனால் மனநிம்மதி இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றார்.
அதற்கு அந்த இளம் முனிவர். எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்று உங்கள் மனைவி ஒரு சமயம் உபதேசம் செய்தாளே! அதன் பிரகாரம் எல்லாவற்றையும் விட்டுவிட்டீர்களா என்று கேட்டார். எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். இன்னும் இந்த ஆச்சிரமத்தை தான் துறக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அந்த ராஜா ஆச்சிரமத்திலே இருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து அக்கினியிலே போட்டார்.
இப்போது போடுகின்றீர்களே இந்தப் பொருள் எல்லாம் உங்களுக்கு சொந்தம் இல்லையே இவையெல்லாம் பிரகிருதிக்கு அல்லவா சொந்தம் என்றார் இளம் முனிவர். சரி அப்படி என்றால் என்னுடைய உடம்பை நான் துறக்கின்றேன் என்றார் ராஜா. இப்படி சொல்லிவிட்டு நெருப்பிலே குதிக்கப்போனார் ராஜா. இளம் முனிவர் ராஜாவை உடனே தடுத்துநிறுத்தி விட்டார்.உடம்பு உங்களுக்குச் சொந்தம் இல்லையே அதெல்லாம் பஞ்ச பூதங்களுக்கு அல்லவா சொந்தம் என்றார். ராஜா யோசித்தார். அப்படி என்றால் எனக்கு என்ன தான் சொந்தம் என்றார். உங்கள் அகங்காரம் தான் உங்களுக்குச் சொந்தம். நீங்கள் துறக்க வேண்டியது அதைத்தான். அதை விடுங்கள் முதலிலே. அது உங்களிடம் இருப்பதனாலே தான் இந்த உலகமே உங்களிடம் இருப்பதாக நினைக் கின்றீர்கள்.
அகங்காரம் இருப்பதனாலே தான் இந்த உலகப் பொருட்கள் எல்லாம் எங்களுக்கு சொந்தம் என்று தோன்றுகின்றது என்று இளம் முனிவர் உருவத்திலே இருந்த ராணி சொன்னார்.
உடனே என்னிடம் இருக்கின்ற அகங்காரத்தை விட்டுவிட்டேன் என்றார் ராஜா. அதன்பின் தான் அந்த ராஜாவும் ஞானி ஆனார். ராணிக்கு கிடைத்தது மாதிரி சக்தி அவருக்கும் கிடைத்தது. இந்தக் கதையை மிகவும் தீவிரமாக ஒருவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். அவர் உடனே சொன்னார். சித்தியடைய வேண்டும் என்பதற் காக அந்த ராஜா எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்கிறார். நான் கூட சித்தி அடைந்திருக்கின்றேன். ஆனால் இவ்வளவு கஷ்டப் படவில்லை என்றார். உங்களுக்கு சுலபமாக சித்தி கிடைத்ததற்கு யார் காரணம் என்று கேட்டேன்.
எங்கள் அப்பா தான் காரணம். அவர் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்தார். உடனே வீட்டிற்கு சித்தி வந்து விட்டார்கள். எனக்கு சித்தி கிடைத்த கதை இது தான் என்றார்.
