மோட்சம் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
ஒருவர் அதிக நேரமாக ஆகாயத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டேன்.
எனக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கின்றது. அது தான் எங்கேயிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
அது அங்கே இல்லை சார் என்றேன். அப்படி என்றால் அது இருக்கின்ற இடம் உங்களுக்குத் தெரியுமா? என்றார். அது எனக்குத் தெரிந்தால் இப்படி ஏன் உங்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்றார். அட போங்க சார் என்று சொல்லி விட்டு அவர் மறுபடியும் ஆகாயத்தையே பார்க்க ஆரம்பித்து விட்டார்.
பெரியவர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா? (சாய்பாபா) மோட்சம் என்பது ஆகாயத்திலேயிருந்து விழுவதும் இல்லை. பூமியிலிருந்து எழுந்து வருவதுமில்லை. அது இந்த உலகத்திலே இருக்கிறதும் இல்லை. மோட்சம் என்பது ஒரு நிலை. அந்த நிலையை நம்மாலே அடைய முடியுமா? முடியும். இதயத்திலே இருக்கின்ற ஆசைகளையெல்லாம் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து எறிந்து விட்டதற்குப் பின் உண்டாகின்ற் நிலை இருக்கு பாருங்கள் அது தான் மோட்ச நிலை.
இதற்கு ஒரு உதாரணம். இப்போது சுலபமாக உயரப் போகக்கூடியது எது? காற்றிலே ஒரு காகிதம் உயரப்பறக்கும். பஞ்சும் பறக்கும். அதற்கு என்ன காரணம். அது இரண்டிடமும் கனம் இல்லை. அது இரண்டும் லேசாக உள்ளது. அதனாலே பறக்கின்றது. மனிதன் அப்படி பறக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். இறக்கை கட்டலாமா? அல்லது வேறு எதிலேயாவது ஏறிக்கொண்டு பறக்கலாமா? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.
அவனிடம் உள்ளடக்கியிருக்கின்ற ஆசைகள். சுயநல நாட்டத்தோடு பொருட்களை சேர்க்கின்ற தன்மை. இது எல்லாம் தான் மனிதன் மேலே ஒரு சுமையாக உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கின்றது.நாளுக்கு நாள் ஆசைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
சுயநல நாட்டமோ ஆகாயத்தையே எட்டிப்பிடிக்கிற அளவுக்கு பெருகிக் கொண்டி ருக்கிறது. இப்படி மனதோடு பளு பலன்களின் பலு. இது இரண்டும் மனிதனை அமுக்கி வைத்திருக்கின்றபோது அவன் எங்கே ஆகாயத்திலே பறக்கிறது.
எழுந்திருப்பதே கஷ்டம். அவன் எங்கே மோட்ச நிலையை எட்டிப்பிடிக்கிறது. மோட்சம் என்றால் அது ஏதோ ஒரு பிரத்தியோகமான பிரதேசம் அல்ல. அது ஏதோ உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் மாதிரி எங்கேயோ இருக்கிறது என்று
நினைக்கக்கூடாது.
அதே மாதிரி ஒரு குருவோ அல்லது சாமியாரோ இந்தாங்க உங்களுக்கு மோட்சம் என்று எடுத்துக் கொடுத்துவிடவும் முடியாது. ஒருவருடைய உண்மையான தன்மை அவருக்குள்ளே இருக்கின்ற மெய்ப்பொருள். அதை உணர்த்துவது தான் மோட்சம். அதை விட்டுவிட்டு வெளியிலே இந்தப் பேரைச் சொல்லி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றவர்களையெல்லாம் நம்பாதீர்கள். வெளி உலகத்திலே பிரயாணம் செய்கின்ற மாதிரி உங்கள் உள்ளுக்குள்ளேயே பிரயாணம் பண்ணுங்க சார். அது தான் மோட்சத்திற்கு போகின்ற வழி.
உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு விமானத்திலே இவ்வளவு நிறை தான் ஏற்ற வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. அதற்கு மேலே ஏற்றமாட்டார்கள்.
ஒரு இயந்திரத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடு இருக்கின்றபோது ஆன்மிகத்திலே ஈடு படுபவர்களுக்கு இது எந்தளவிற்கு அவசியம் என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
மிருகங்களுக்கு வெளிப்பார்வை தான் உண்டு. உள்பார்வை கிடையாது. பச்சைப்புல் எங்கேயாவது கண்ணிலே பட்டால் பசுமாடு நேராக அங்கே போய்விடும். அது யாருடைய நிலம். அங்கே போவது சரியா தப்பா என்று எல்லாம் யோசிக்காது.
மனிதன் அப்படி இல்லை. மனதை உடையவன் மனிதன். இவன் உள்பார்வை பார்க்கவேண்டும். அங்கே உட்காந்திருக்கின்ற சுமைகளையெல்லாம் தூக்கி எறிய வேண்டும். அப்போது தான் ஆகாயத்திலே பறக்க முடியும். மோட்சத்தை அடையமுடியும். அதைவிட்டு விட்டு சுலோகம் சொல்கின்றது. தியானம் செய்வது. பாராயணம் செய்வது. ஜெபமாலை உருட்டுவது. இதெல்லாம் பிரயோசனப்படாது.
ஒருவர் சொன்னார். சார் நான் ஆகாயத்திலே பறக்க வேண்டும் என்பதற்காக அண்ணாந்து பார்த்துக் கொண்டே நின்றேன். கண்னை முடி தியானம் செய்தேன். உடனே என்னுடைய சுமை குறைந்தது. இருந்தாலும் ஆகாயத்திலே பறக்க முடியவில்லை. இப்போது நான் தெருவிலே பறக்கின்றது போல் ஆகிவிட்டது சார் என்றார். என்ன சார் ஆகியது என்றேன். நான் கண்னை மூடி தியானம் செய்த போது என் பக்கத்திலே இருந்தவன் சட்டையில் இருந்த பொக்கெட்டை வெட்டி விட்டான் சார். அது தான் சுமை குறைந்தது என்றேன். இப்போது நான் அவனைத் தேடி தெருவிலே பறந்து கொண்டு இருக்கின்றேன் என்றான்.
