தனக்காக வாழ்க! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
இதோ இருக்கின்றாரே சார். இவர் மற்றவர்களுக்காக தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றார். அப்படி என்று யாராவது சொன்னால் அது ஏமாற்று வேலை என்கின்றார் ஒரு பெரியவர். உங்களை நீங்கள் முதலில் கவனியுங்கள் சார். தனக்காக சேவை செய்து கொள்வது தான் உலக இயல்பு. இன்னொருவருக்கு சேவை செய்வதே நோக்கம் என்று யாரும் இயங்க முடியாது. இதுவரைக்கும் எந்த மனிதனும் தனக்கென்று வாழாமல் இருந்தது கிடையாது. தனக்காக வாழ்வதிலே இரண்டு வகை உண்டு. ஒருவகை எப்படி என்றால் தன்னுடைய நலனுக்காக மற்றவர்கள் நலனை அழிப்பதைத் தவிர்க்க முடியாமல் போவது.
இன்னொருவகை எப்படி என்றால் தனக்காக வாழ்வதிலே மற்றவர்களுக்கு பல நல்ல பயன்கள் ஏற்படலாம். இந்த இரண்டாவது வகையிலே தன்னுடைய நலன்களைப் பாதுகாத்து வளர்ச்சி யடைகின்றது தான் நல்லது. தனக்காக வாழ்வது என்பது மனித இயற்கை. இப்படிச் சொல்வது தவறாகத் தெரியலாம். பண்பாடு அற்றதாகவும் தோன்றலாம். ஆனால் உண்மை அது தான். இதற்கு ஒரு உதாரணம் சொல்கின்றார் அவர். ஓடுகின்ற வெள்ளத்திலே ஒருவன் விழுந்து விட்டான் சார்.
அவனைக் காப்பாற்றுவதற்காக ஓடுகின்ற அடுத்தவன் கூட அடிப்படையிலே பார்த்தால் தனக்கே ஒரு சேவையைத் தான் செய்திருக்கின்றான். எப்படி தெரியுமா? அவன் தண்ணீரிலே விழுந்தவுடனே இவன் மனதிலே ஒரு துன்பம். ஒரு கஷ்டம் ஏற்படுகின்றது. அந்த துன்பத்தை போக்குவதற்காகவே இவனும் வெள்ளத்திலே குதிக்கின்றான். அடுத்தவனைக் காப்பாற்றத்தான். சமூக அமைப்பே நாம் யாரையும் யாருக்காகவும் தியாகம் செய்யச் சொல்ல தேவையில்லாத தன்மையில் இருக்கவேண்டுமாம்.
தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதற்குத் தான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான். அப்படி பிறக்கின்ற மனிதன் தன்னுடைய நன்மைக்கான செயற்பாடுகளிலே ஈடுபடுவது நல்லது தான். அது ஒன்றும் பாவமில்லை. இப்படி இருக்கின்றபோது தனக்காக வாழும்படி யாரும் போதனை செய்வதில்லை.
இந்த சமுதாயத்திற்காக வாழ். மனித குலத்திற்காக வாழ். அப்படி இப்படி என்று எல்லாம் சொல்லி போதனை செய்வதனாலே போலித்தன்மை தான் ஏற்படுகின்றது என்கின்றார் அவர். தனக்காக வாழுவதே கொஞ்சம் ஆழமான நிலையிலே மற்றவர்களுக்கு சேவை செய்வதாக ஆகலாம். இன்னொரு விடயம்.
மற்றவர்களுக்களைப் பார்த்து அவர்கள் மாதிரியே ஆக வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது. மற்றவர்கள் மாதிரி ஆகின்ற முயற்சியிலே உங்களை நீங்கள் இழந்து விடுவீர்கள். இதனாலே நீங்கள் தானாக அடையக்கூடிய வளர்ச்சியை அடையாமல் தவற விட்டு விடுவீர்கள்.
நீங்கள் எந்த அளவிற்கு முன்னேற முடியுமோ அதை முழுமையாக அடைவது தான் உங்கள் இலட்சியமாக இருக்க வேண்டும். இதெல்லாம் ஒரு பெரியவருடைய சிந்தனை. இதைக் கேட்டதும் எல்லோரும் சுயநலவாதியாக மாறுங்கள் என்று நினைத்துவிடக்கூடாது. சுயநலம் என்கின்ற வார்த்தைக்கு நாம் இப்போது வைத்திருக்கின்ற அர்த்தம் வேறு. ஒரு பெரிய பங்களா. அதற்கு முன்னாலே ஒரு பெரிய ஆள். பெரிய மியூசிக் பார்டியோடு நின்று கொண்டிருந்தார். Happy Birthday to you என்று பாடிக்கொண்டிருந்தான். யாருக்காக இப்படி இங்கே நின்று பிறந்த நாள் வாழ்த்து பாடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். அந்த வழியாக போன ஒரு வெளியூர் ஆள்.
இந்த பங்களாவினுடைய சொந்தக்காரருக்கு இன்றைக்கு பிறந்த நாள். அதற்காகத் தான் இப்படி செய்கின்றோம் என்றார் அந்த ஆள். என்ன இது? இந்த பெரிய மனிதனுக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியவில்லை. நீங்கள் இவ்வளவு ஆர்வமாக இங்கே வாழ்த்துப் பாடுறீர்கள். அந்த ஆள் ஜன்னலையாவது திறந்து இதைப்பார்த்து இரசிக்க வேண்டாமா? என்றார் வெளியூர் ஆள். இதற்கு அந்த ஆள் விபரம் தெரியாமல் பேசாதே. நானே இரண்டு இடத்திலே எப்படி இருக்க முடியும். நான் தான் அந்த பெரிய மனிதன் என்றார். தனக்காக வாழ்வதிலே இது ஒரு தனி ரகம்.
