எறும்பின் கர்வம்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு சமயம் இந்த உலகத்திலே உள்ள எறும்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு மகாநாடு நடத்தியது. அகில உலக எறும்புகள் மகாநாடு! அதிலே ஒரு எறும்புத் தொண்டர் பேசுகின்றார். எறும்புச் சகோதரர்களே! எறும்பு சகோதரிகளே! இந்த உலகத்திலே எமக்கு பெரிய எதிரி யார் என் கேட்டால் அது யானை தான். நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டமாக எங்கேயாவது போய்க்கொண்டிருப்போம்.

அப்போது திடீர் என்று ஒரு யானை வந்து எங்கள் மேலே காலை வைக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன ஆகும்? ஆயிரக்கணக்கான எம் தோழர்கள் இறந்து விடுவோம். இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்றார்.

அடுத்தபடியாக ஒரு எறும்புப் பிரதிநிதி பேச வந்தார்! நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய எதிரியான யானையைக் கொல்வதற்கு ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு உட்காந்தார். அதன்பின் அந்த எறும்புகள் எல்லாம் பல குழுக்களாகப் பிரிந்து ஆலோசனை செய்தார்கள். கடைசியிலே ஒரு முடிவுக்கு வந்தார்கள். அது எப்படி என்றால் அவர்களுக்குள்ளே ஒரு அகில உலக தலைவரை தேர்ந்தெடுப்பது. அந்த தலைவர் கடவுளை வேண்டி தவம் செய்யவேண்டும். கடவுள்வந்ததும் அவரிடம் ஒரு வரம் வாங்க வேண்டும். அதாவது நாம் யானைகளை சாகடித்தால் அது சாக வேண்டும் என்கின்ற வரம்.

இது தான் அவர்கள் செய்த முடிவு. உடனே அந்த மகாநாட்டிலே அந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது. எல்லா எறும்புகளும் சேர்ந்து ஒரு தேர்தலை நடத்தினார்கள். ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏகப்பட்ட போட்டிகளுக்கு நடுவிலே ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராகிய உடனேயே அந்த எறும்புக்கு ஆணவம் வந்து விட்டது.

எறும்புகளே! உங்களின் ஒரே தலைவன் நான் தான். கடவுளிடம் வரம் வாங்கி கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. எப்பேற்பட்ட வரம் வாங்கப் போகின்றேன் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்றது.

அதிக காலம் தவம் இருந்தது. அந்தத் தலைவர் எறும்பு. ஒரு நாள் கடவுள் காட்சி கொடுத்தார். ஏறும்பே உன் தவத்தை மெச்சினேன். என்ன வேண்டும் கேள் என்றார். உடனே அந்த எறும்பு வேறு ஒன்றுமில்லை நான் கடித்தால் சாகவேண்டும் அவ்வளவும் தான் என்றது. சரி தருகின்றேன் என்று சொல்லிவிட்டார் கடவுள்.
வரம் வாங்கியாச்சு. இந்த எறும்பிற்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.இருந்தாலும் வாங்கிய வரம் பலிக்குதா என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமே என்ன செய்து யாரைக் கடிக்கலாம் என்று யோசனை செய்தது.

எதிரிலே வரம் கொடுத்த கடவுள் தான் நின்று கொண்டிருந்தார். அது தான் வரம் வாங்கியாச்சே இனிமேல் இவர் என்னத்திற்கு என்று யோசனை செய்ததது.

உடனே அவரை ஒரு கடி கடித்தது. அவர் உடனே பட் என்று கையாலே ஒரு தட்டுத் தட்டினார். எறும்பு அப்பாடா என்று கத்திக் கொண்டே சுருண்டு விழுந்தது. வலி தாங்கமுடியவில்லை.என்ன கடவுளே இது. வரம் பலிக்கவில்லையே நீங்கள் சாக வேண்டும் அல்லவா? இப்போது நான் தான் இறந்து விடுவேன் போல் இருக்கின்றது என்றது எறும்பு. தரையிலே இருந்தபடியே.

கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார். நீ என்ன வரம் கேட்டாய்? நான் கடித்தால் சாக வேண்டும் என்று வரம் கேட்டாய் கொடுத்து விட்டேன். இப்போது நீ கடித்தே சாகப் போகின்றாய் என்றார். இந்த எறும்பு எப்படி வரம் கேட்டிருக்க வேண்டும். நான் கடித்தால் நான் யாரைக் கடிக்கின்றேனோ அவர்கள் சாகவேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஏன் அது அப்படிக் கேட்கவில்லை தெரியுமா? ஆணவம். ஆணவம் வந்தால் அறிவு மழுங்கிவிடும். அதனாலே அவசரத்திலே அப்படி கேட்டுவிட்டு மாட்டிக்கொண்டது. நமக்கும் அப்படித் தான். ஆணவம் வந்துவிட்டால் அறிவு சரியாக வேலை செய்யாது.

ஒரு இடத்திலே எறும்புகள் எல்லாம் வரிசையாக போய்க்கொண்டிருந்தது. அந்த வழியாக ஒரு ஆண் யானையும் ஒரு பெண் யானையும் வந்தன. எறும்புகள் குறுக்கே போவதைப் பார்த்ததும் பெண் யானை நின்றது.

ஆண் யானையைப் பார்த்து நீங்கள் கொஞ்சம் நில்லுங்கள் என்றது. ஏன் நிற்கச் சொல்கின்றாய் என்று கேட்டது அது. பாவம் எறும்புகள். அவையெல்லாம் போகட்டும். தவறுதலாக நாம் மிதித்து விடக்கூடாது என்றது பெண் யானை.

சரி வா அந்தப் பக்கமாக விலகிப் போய்விடுவோம் என்று சொல்லி ஆண் யானை பெண் யானையை அழைத்துக் கொண்டு வேறு பக்கமாகப் போனது.

இதைப் பாரத்து விட்டு ஊர்ந்து போய்கொண்டிருந்த எறும்புகளிலே ஒன்று இன்னொரு எறும்பிடம் சொல்லியது பார்த்தியா நாம் கடித்து விடுவோம் என்று பயந்து கொண்டு யானையும் விலகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்றதாம். அதற்கு இன்னொரு எறும்பு பாவம் யானைகள் பிழைத்துப் போகட்டும் விட்டுவிடுவோம் என்றதாம்!

The pride of the information ant! – Today's information – Thenkachi Ko. Swaminathan

Comments are closed.