மற்றவர் மகிழ்ச்சி – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
இந்த உலகத்திலே நாம் மட்டும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது அது சாத்தியமில்லாத விடயம். பக்கத்தில் இருப்பவர்களும் சந்தோசமாக இருந்தால் தான் நாமும் சந்தோசமாக இருக்க முடியும். இதைப் பற்றி விபரமாக சொல்கிறேன். அதற்கு ஒரு கதை இருக்கிறது. ராஜ்யவர்த்தனன் என்று ஒரு ராஜா இருந்தார். அந்த ராஜா 7000 வருடம் தன்னுடைய இராஜாங்கத்தை நல்லபடியாக நிர்வாகம் செய்து வந்தார். 7000 வருடம் எப்படி ஒருவர் இருக்க முடியும் என்கின்ற சந்தேகம் வருகிறதா? இது ஒரு புராணக்கதை. மக்கள் எல்லோருக்கும் அந்த ராஜா பெயரிலே மிகவும் மரியாதை உண்டு.
ஒரு நாள் ராணி அந்த ராஜாவுக்கு தலையிலே எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். திடீர் என்று அந்த அம்மா கண் கலங்க ஆரம்பித்தார். என்ன விடயம் ஏன் கண் கலங்குகிறாய் என்று ராஜா கேட்டார். உங்கள் தலையிலே ஒரு முடி நரைத்திருக்கிறது என்றார். உங்களுக்கு வயதாகி விட்டது என்று தானே அர்த்தம்? எனக்கு கவலையாக போய் விட்டது. அதுதான் அழுதேன்! இதுக்குப் போய் யாராவது அழுவார்களா? இது எமன் எனக்கு கொடுத்திருக்கிற எச்சரிக்கை. நான் உடனே காட்டுக்குப் போய் தவம் செய்ய வேண்டும் என்றார் ராஜா. நானும் கூட வருவேன் என்றார் ராணி. ராஜாவும் ராணியும் காட்டுக்குப் போனால் மக்களின் நிலைமை என்ன ஆகும்.
நீங்கள் இரண்டு பேரும் காட்டுக்குப் போக வேண்டாம் என்று கூறி ஜனங்கள் எல்லாம் மிகவும் தூரத்திலே இருந்த ஒரு சூரிய ஆலயத்திற்குப் போனார்கள். சூரியனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தார்கள். மூன்று மாதம் ஆனது. சூரிய பகவான் நேரிலே காட்சி கொடுத்தார். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். எங்கள் ராஜா இன்னும் 10,000 வருடங்கள் நோய்நொடி இல்லாமல் இளமையோடு எங்கள் தேசத்தை ஆள வேண்டும் என்றார்கள். சரி அப்படியே வரம் தந்தேன் என்று சொல்லி சூரிய பகவான் சென்றுவிட்டார். ராஜாவுக்கு இந்த விடயம் தெரிந்தது ஆனால் அவர் சந்தோசப்படவில்லை. வருத்தப்பட்டார்.
மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக வருத்தப்படுகிறீர்களே ஏன் என்று கேட்டார் ராணி. இந்த வரத்தால் நான் எப்படி சந்தோசப்பட முடியும். நான் 10,000 வருடங்கள் உயிரோடு இருக்கலாம். ஆனால் நீ இருக்க மாட்டியே! இந்த வரத்தை வாங்கிக் கொடுத்த மக்கள் இருக்க மாட்டார்களே! என்றார் ராஜா. என்னுடைய ராணியும் எனக்குப் பிரியமான மக்களும் இல்லாமல் நான் மட்டும் 10,000 வருடங்கள் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்? என்றார் ராஜா.
அதன் பிறகு அந்த ராஜாவும் ராணியும் அதே சூரியன் ஆலயத்திற்குப் போனார்கள். தவம் செய்தார்கள். நாட்டிலே இருக்கிற எல்லோரும் 10,000 வருடங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று வரம் வாங்கினார்கள். அதற்குப் பிறகு எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இதுதான் இந்தக் கதை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன வென்றால் நாம் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் மற்றவர்களும் சந்தோசமாக இருக்க வேண்டும். அந்தக் காலத்திலே அப்படி இருந்தார்கள். இந்தக் காலத்திலே அப்படியா இருக்கிறார்கள்.
அலுவலகத்திலே வேலை பார்க்கிற ஒருவர் தன்னுடைய மேனேஜரிடம் போனார். சேர் இந்த அலுவலகத்திலே நீங்கள் சந்தோசமாக இருந்தால் தான் நான் சந்தோசமாக இருக்க முடியும். நீங்கள் சந்தோசமாக இருப்ப தற்கு என்ன வழி என்று கேட்டார்.அது உன் கையில்தான் இருக்கிறது என்றார் மேனேஜர். எப்படி என்று கேட்டார் இவர்.நீ ரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குப் போய்விடு அதுபோதும் நான் சந்தோசமாக இருப்பேன் என்றார் அவர்.
