ராசிபலன் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒருவர் வேகமாக வந்தார். அவசரமாக ஒரு பத்திரிகை வாங்கினார். அதைவிட அவசரமாக அங்கேயே நின்று புரட்டினார். ஒரு நிமிடம் என்னத் தையோ ஆர்வமாகப் பார்த்தார். அதன்பின் நிதானமாகப் பத்திரிகையை மடித்து வைத்து அவசரமில்லாமல் நடந்து போனார். அவரிடம் மெதுவாகப் போய் அப்படி எதை சேர் அவ்வளவு ஆர்வமாகப் பார்த்தீர்கள் என்று கேட்டேன். கடையிலே பத்திரிகை வாங்கியவுடன் முதற் காரியமாக அதைப் பார்த்து விடுவேன் என்றார். எதை என்று கேட்டேன்.

அதுதான் சேர் ராசிபலன்! அதைப் பார்த்தால் தான் எனக்கு எல்லாமே சரியாக ஓடும் என்றார். அது சரி சேர் ராசிபலனில் என்ன போட்டிருக்கிறதோ அதன் பிரகாரம் அன்றைக்கு சரியாக நடக்கிறதா என்று கேட்டேன். நடக்கிறதா? இல்லையா? என்று எல்லாம் பார்க்க மாட்டேன் சேர். காலையிலே அதைப் பார்க்க வேண்டும் அதிலே ஒரு ஆவல் அவ்வள வுதான் என்றார்.

கிட்டத்தட்ட எல்லோருமே அதே ஆர்வத்தில் தான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ராசிபலன் பார்க்கும் பழக்கம் தமிழர்களிடம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்கிறார் பேராசிரியர் க.ப.அறவாணன். அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமீபத்திலே படித்தேன். ராசிபலன் போடாமல் வரும் நாளிதழ்கள் இங்கே மிகவும் குறைவு! அது போட்டால்தான் அதிகமாக விற்பனை ஆகும். அதனாலே நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அதைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மிகவும் வேடிக்கை சேர்! மெட்ராஸில் பத்திரிகை வாங்கித் தன்னுடைய ராசிபலன் பார்த்து பெங்களுரில் ஓடும் குதிரை மேலே பணம் கட்டுபவர்களும் உண்டு. ராசிபலன் பார்த்துவிட்டு லாட்டரிச் சீட்டு வாங்குபவர்களும் உண்டு. இந்தியாவிலே அச்சாகிற மொத்த லாட்டரி சீட்டுலே 70 சதவீதம் தமிழ்நாட்டிலேதான் விற்பனையாகுதாம் சேர்!
வான் மண்டலம் பூ மண்டலத்தை பாதிக்கிறது உண்மைதான். அதை அறிவியல் பூர்வமாகச் சிந்திக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இன்று நண்பரால் பணவரவு என்று ராசிபலன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நண்பன் இன்றைக்குப் பணம் கொண்டுவந்து கொடுக்கப்போறான் என்று ஆகாயத்திலே உள்ள நட்சத்திரங்களுக்கு எப்போது சேர் தெரியும்.

அதுவுமில்லாமல் இங்கே உள்ள நண்பர்கள் எந்தக் காலத்திலே சேர் பணம் கொடுத்திருக்கிறார்கள்! நண்பர்களைப் பக்கத்திலே இருக்கிற நம்மாலையே புரிந்து கொள்ள முடியவில்லை. எங்கேயோ இருக்கிற நட்சத்திரத்திற்கு தெரியுமா?

ஒரு காலத்திலே நாம் வாழ்கிற இந்தப் பூமி ஒரே இடத்திலே நிலையாக நிற்கிறது என்றும் சூரியனும் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது என்றும் நம்பிக் கொண்டிருந்தோம். அந்தக் காலத்திலே உருவான ராசிபலன் கொள்கையை சூரியனைச் சுற்றித்தான் பூமி வருகிறது என்று தெரிந்துகொண்ட இந்தக் காலத்திலேயும் நம்பிக் கொண்டிருப்பது விநோதம் தான்.

இந்த ராசிபலன் பார்க்கும் பழக்கம் நம்முடைய ஊக்கத்தை இழக்கச் செய்யக்கூடிய ஒரு பழக்கம். அது வேண்டாம் விட்டு விடுங்கள். இப்போது ஒரு உதாரணத்திற்கு நாமே ஒரு சோதனை செய்து பார்ப்போம்! ஒரே நாள் வந்த தினசரிப் பத்திரிகைகள் சிலவற்றை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு பத்திரிகையிலும் என்ன பலன் போட்டிருக்கிறது என்று பார்க்கலாம். என்னுடைய நண்பர் ஒருவர் ராசிக்கு (ரிஷபம்) ஒவ்வொரு செய்தித்தாளிலும் என்ன ராசிபலன் என்று பார்த்தோம்!

ஒரு பத்திரிகையிலே செலவும் சிரமும் என்று போட்டிருந்தது. இன்னொரு பத்திரிகையிலே சுலபமான நன்மை என்று போட்டிருந்தது. இதிலே எதைச் சேர் நம்புவது? நீங்களும் ஒரு நாள் இதைச் சோதித்துப் பாருங்கள். அதற்குப்பிறகு இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள். என்னுடைய நண்பர் ஒருவரும் நானும் ஒருநாள் கடையிலே பத்திரிகை வாங்கினோம். நண்பர் ராசிபலனிலே எல்லாம் நம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும் நான் பத்திரிகை வாங்கியவுடனே உங்கள் ராசி என்ன சொல்லுங்கள் பலன் என்ன என்று பார்க்கலாம் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே அதெல்லாம் பொய். அதை ஏன் பார்க்கிறீர்கள். என்றார். சும்மா சொல்லுங்கள் என்றேன்.
என் ராசி தனுசு… அதிலே பணவரவு என்று போட்டு இருக்கிறது என்றார். நான் பார்த்தேன் ஆச்சரியப்பட்டுப்போனேன். பணவரவு என்று தானே போட்டிருக்கிறது.

அது எப்படி சேர் பார்க்காமலே கரெக்டாக சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் மெதுவாக அருகில் வந்து காதோடு காதாகச் சொன்னார் அந்தப் பத்திரிகைக்கு ராசிபலன் எழுதுவதே நான் தான் என்றார்.

Horoscope – Today's information – Thenkachi Ko. Swaminathan

Comments are closed.