ஆசை – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Aasaa - Today's news - Thenkachi Ko. Swaminathan

எனக்கு வாழ்க்கையிலே ஒரே ஒரு ஆசைதான் சேர் என்றார் ஒருவர். அது என்ன ஆசை என்று கேட்டேன். ஆசைகளை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்றான். இப்படி ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் ஆசை கொள்வது தவறு என்கிறார் ஒரு பெரியவர். இதுமாதிரி ஆசைகளை ஒழிக்க ஆசைப்பட்டால் அந்த நோக்கம் நிறைவேறாதாம். அந்த முயற்சியிலே புதிதாக சில துன்பங்கள்தான் வந்து சேரும்.

ஆசைகளைத் தானாக விழ வைத்து விடலாம். அதற்கு வழி என்ன தெரியுமா? எந்த ஒரு ஆசையையுமே பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்பதை உணரவேண்டும். உணர்ந்தால் ஆசைகள் தானாக விழுந்துவிடும்.

அதை விட்டுவிட்டு ஆசைகளை விட்டுவிட வேண்டும் என்பதில் ஒரு ஆசையை வைத்துக்கொண்டு அதற்காக கடுமையான முயற்சிகளையும் செய்துகொண்டு நான் ஆசைகளை விட்டுவிட்டு ஞானோதயம் அடைவதற்கு கடுமையான முயற்சி செய்கிறேன் சேர் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எந்தக் காலத்திலும் ஞானோதயம் வரப்போவதில்லை. அதற்குப் பதிலாக துன்பம் தான் வந்து சேரும் என்பது அவருடைய கருத்து. எந்த ஒரு ஆசையையும் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்பதை உணரவேண்டும். அது சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்.

ஒரு ராஜா அவர் மனதிலே எப்போதும் அமைதியில்லை என்று கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தார். இந்தத் துன்பத்தைப் போக்குவதற்கு பல வழிகள் எல்லாம் செய்து பார்த்தார். ஒன்றும் சரியாக வரவில்லை. கடைசியாக ஒரு காரியம் செய்தார். அதாவது ஒரு வேதாந்தியைத் தேடிப் போனார். அவரைப் பார்த்துக் கேட்டார். ஐயா என்னுடைய துன்பங்களில் இருந்து நான் விடுபட வேண்டும். ஐயா என்னுடைய துன்பங்களில் இருந்து நான் விடுபட வேண்டும். அதற்கு சுலபமாக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்.

அதற்கு அந்த வேதாந்தி சொன்னார். அதற்கு ஒரு வழி இருக்கிறது. அது மாதிரி செய்! அதாவது உன் இராஜ்ஜியத்திற்குள்ளே போதும் என்னும் மனதுடன் வாழும் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுடைய சட்டையை வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி போட்டால் உன்னுடைய துன்பம் தீர்ந்துவிடும் என்றார். உடனே ராஜாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அரண்மனையிலே இருந்த அத்தனை பேரையும் ஆளுக்கு ஒரு பக்கமாக அனுப்பினார். தேடச் சொன்னார். போதும் என்கிற மனதுடைய ஒருவனைப் பிடித்து கொண்டு வரச் சொன்னான்.

எங்கெங்கோ எல்லாம் தேடி கடைசியாக ஒரு ஆளைக் கண்டுபிடித்து அவன் போதும் என்கிற மனதுடன் இருக்கிறவன் தான். ஆனால் அவனிடம் சட்டை எதுவும் இல்லை கட்டியிருக்கிற துண்டே போதும் எனும் மனதுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சட்டை இருந்தால் தான் ராஜா வாங்கி போட முடியும். அந்த வேதாந்தி ஏன் அப்படிச் சொன்னார் என்று ராஜாவுக்குப் புரிந்தது. இதுவரைக்கும் சொல்லியதெல்லாம் ஞானமார்க்கத்தைத் தேடிக் கொண்டிருக்கிறவர்களுக்கான தகவல். இன்றைய இளைஞர்கள் இதைக் கேட்டுவிட்டு நமக்கு ஆசையே வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. அதனால் நாம் படுகிற ஆசையிலே ஒரு நியாயம் இருக்க வேண்டும்.

ஒரு ஆள் ஒரு கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பேராசை மிகவும் பணம் சேர்க்க வேண்டும் என்று. திடீரென்று ஒருநாள் அவருக்கு உடம்பு சுகமில்லாமல் போய்விட்டது. இனிமேல் பிழைப்பது கஷ்டம் என்னும் நிலைமை.
மரணப்படுக்கையிலே இருந்தார். சொந்தக்காரர்கள் எல்லாம் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். இவன் மெதுவாக கண்ணைத் திறந்து என் மனைவி எங்கே என்றான். இங்கே தான் இருக்கிறேன் என்றாள் அந்த அம்மா. என் பிள்ளைகள் எல்லாம் எங்கே என்றான். இதோ பக்கத்திலே தான் இருக்கிறார்கள் என்றாள். என் மகள் எங்கே என்றான். எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்கள். நீங்கள் கவலைப்படாமல் தூங்குங்கள் என்றாள் அந்த அம்மா. அவன் மெதுவாக கஷ்டப்பட்டு வாயைத் திறந்து அடப்பாவிங்களா? எல்லோரும் இங்கே இருந்தால் அங்கே என் கடையை யார் கவனிப்பார்கள் என்றான்.

Comments are closed.