பெருங்கருணை நாச்சியார்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
நந்திவர்மன் காலத்திலே நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்! அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா? கல்வெட்டிலே இருக்கிறது. நந்திக்கலம்பகத்திலே புகழ்பெற்றவன் மூன்றாம் நந்திவர்மன். அவன் ஆண்ட இடம் தெள்ளாறு! தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று அவனைப் பற்றிப் பெருமையாக சொல்வார்கள்!
அந்தக் காலத்திலே அந்த ஊரிலே ஒரு தேர்தல் நடந்தது! உள்ளூராட்சித் தேர்தல். அந்த ஊருக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு பெண்மணி! அந்தப் பெண்ணுக்கு பெருங்கருணை என்று பெயர். அந்தப் பெண்தான் ஊராட்சி மன்றத் தலைவி!
ஒருநாள் மாலை அந்த ஊரிலே சில பெண்கள் குளத்துக்குப் போய் குடிநீர் எடுத்துக் கொண்டு குடத்தை இடுப்பிலே வைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.குடித்துவிட்டு வழியிலே ஒரு ஆள் அவர்களிடம் வம்பு செய்துகொண்டிருந்தான். அந்தப் பெண்களைப் பற்றி அவதூறான வார்த்தைகள் பேசினான். உடனே அந்தப் பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவியிடம் இதைப்பற்றி புகார் செய்தார்கள்.
அந்தத் தலைவி அதுதான் பெருங்கருணை உடனே வம்பு செய்த ஆசாமி யார் என்று விசாரித்துப் பார்த்தார். அது வேறு யாரும் இல்லை. தன்னுடைய கணவன் தான். நீதி தவறிவிட முடியுமா? மறுநாள் ஊர்க்கூட்டம் நடந்து. கிராம மன்றத்திலே அந்தக் குற்றவாளி விசாரிக்கப்படுகிறான். விசாரிக்கிறது மனைவி. பதில் சொல்வது கணவன். இருந்தாலும் தீர்ப்பு என்ன தெரியுமா?
இந்த ஊரிலே உள்ள திருமூலட்டானேஸ்வரர் கோவிலுக்கு சில பசுக்களை தானமாகக் கொடுக்க வேண்டும்! ஒரு மண்டலம் வரைக்கும் அதாவது 48 நாள் வரைக்கும் தினமும் பொழுது விடிவதற்கு முன்னால் கோவிலுக்குப் போய் முன்புறத்தை சுத்தப்படுத்த வேண்டும். மெழுக வேண்டும். பூமாலை கட்ட வேண்டும். அகல்விளக்கு எல்லாம் ஏற்றி வைக்க வேண்டும் இதுதான் தீர்ப்பு. ஊர்க்கூட்டம் கலைந்தது!
மறுநாள் காலைப் பொழுது விடிவதற்கு முன்னால் அந்தக் கோவில் பக்கம் என்ன நடந்து கொண்டிருந்தது தெரியுமா? தீர்ப்பு வழங்கிய அந்தக் கிராமத்துத் தலைவி பெருங்கருணை அம்மையாரே கோவிலுக்கு முன்பக்கம் மெழுகி சுத்தப்படுத்தி பூமாலைகட்டி அகல் விளக்கெல்லாம் ஏற்றி வைத்திருந்தார். தினமும் இதே மாதிரி செய்து கொண்டிருந்தார். ஊர் ஜனங்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, சிலபேர் நேரிலே கேட்டுக்கொண்டார்கள்!
ஏன் அம்மா தண்டனை பெற்றது உன்னுடைய கணவர் அவன் செய்ய வேண்டிய வேலையைத் தீர்ப்பு வழங்கிய நீ செய்துகொண்டிருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று கேட்டார்கள்.
இதற்கு அந்த அம்மா பதில் சொன்னார். குற்றம் செய்தவருக்கு குற்றத்திற்குரிய தண்டனை கொடுத்தேன். இந்த ஊருக்குத் தலைவி என்ற முறையிலே அதைச் செய்தேன். இப்போது மனைவி என்ற முறையிலே அவருடைய துன்பத்திலே பங்கேற்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது! அந்தக் கடமையைத் தான் இப்போது நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்! இதுதான் அந்த அம்மா சொன்ன விளக்கம்.
தன்னுடைய கணவனே ஆனாலும் குடிமயக்கத்தில் ஊர்ப் பெண்களைத் துன்புறுத்தியதற்கு உரிய தண்டனையைக் கொடுத்த செயலுக்காக பெருங்கருணை அம்மையாரை அந்த ஊர்மக்கள் குடிக்குறை துடைத்த நாச்சியார் என்று கல்வெட்டிலே பொறித்து வைத்திருந்தனர். இந்தக் காலத்திலேயும் அதுபோல சில பேர் உண்டு! இந்தக் காலத்து இல்லத் தலைவி ஒருவர் மிகவும் சோகமாக இருந்தார். என்ன விடயம் என்று விசாரித்தேன்.
என்னுடைய கணவன் என்ன தவறு செய்தாலும் உடனே தண்டனை கொடுத்துவிடுவேன். கொடுத்த பிறகு அந்தத் தண்டனையை அனுபவிப்பது என் கணவன் என்று நினைத்து கவலைப்படுவேன் என்றார். என்ன மாதிரி தண்டனை கொடுப்பீர்கள் என்று கேட்டேன். பெரிதாக ஒன்றும் இல்லை அவர் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு வேளை சாப்பாடு கிடையாது. அவ்வளவுதான்! இப்போது கூட அந்தத் தண்டனை தான் கொடுத்துவிட்டு வருகிறேன். அதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றார்.
இதற்காகவா இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள் என்றேன். அவர் சாப்பிட்டு இன்றையோட 25 நாள் ஆகிறது அதுதான் கவலையாக இருக்கிறது என்றார்.
