நடக்கலாமா? – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
காலை நேரம், கடற்கரை ஓரம் காலை வீசிக் கொண்டு கையை வீசிக்கிட்டு ஏதோ சண்டைக்குப் போற சிப்பாய் மாதிரி எல்லோரும் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார்கள். அதிலே எனக்குத் தெரிந்த ஒருத்தர் எதிரிலே வந்தார். மிகவும் வேகமாக. என்ன சேர்! வாக்கிங்கா என்று கேட்டேன்.
அவராலே ஆமாம் என்று பதில் சொல்ல முடியவில்லை சேர்.. அவ்வளவு கஷ்டம்!மூச்சு விடுவதற்கே வாயைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தார். எங்கே பேசுவது.கொஞ்சம் நின்று நிதானமாக மூச்சு விட்டுவிட்டு அதற்குப் பின்பு சொன்னார். ஆமாம் என்று.
என்ன சேர் இவ்வளவு வேகம்? என்றேன். உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் சேர் நடக்க அரம்பித்தேன். ஒரு நாள் இன்று ஒரு தகவலிலே கேட்டேன். நடக்கிறது நல்லது என்று அன்றில் இருந்து நடக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனாலும் மிகவும் கஷ்டமாக இருக்கு சேர். இப்ப பாருங்கள். உங்களிடம் சுலபமாக பேச முடியவில்லை. மூச்சு வாங்குது. உடம்பு கூட வலிக்கிறமாதிரி இருக்கு! அப்படி என்றார். உங்களை யாரு சேர் இவ்வளவு வேமாக நடக்கச் சொன்னது? வேகத்தைக் குறையுங்கள். மெதுவாக நடவுங்கள் என் றேன்.
நீங்கள் நடக்கிறதினாலே என்னென்ன சௌகரியம் என்று அன்றைக்கு சொன்னீர்களே தவிர சௌகரியமாக நடக்கிறது எப்படி என்று சொன்னீர் களா சேர்? என்றார் அவர் லேசாக மூச்சு வாங்கிக் கொண்டே மூச்சுவாங்கிக் கொண்டே சொன்னால் கூட இவர் சொல்றதிலேயும் ஒரு நியாயம் இருக்கு. அதனாலே வாக்கிங் போகிறவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புக்கள் என்னென்ன என்பதை இன்றைக்கு தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வயசு 40 இற்கு மேலேயா? உங்கள் எடை இருக்க வேண்டிய தைவிட 10 கிலோ அதிகமாக இருக்கா? நீங்கள் புகைப் பிடிக்கிறவரா? இதய நோய், இரத்த நாள நோய், உயர் ரத்த அழுத்தம் இப்படி ஏதாவது உங்களுக்கு உண்டா? அப்படி என்றால் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு வாக்கிங் போக ஆரம்பித்துவிடாதீர்கள்.
முதலிலே ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அது தான் நல்லது. நடக்கிறபோது, உடற்பயிற்சி செய்கின்ற போதே மார்புப் பகுதியிலே அல்லது வேறு எங்கேயாவது தொடர்ந்து வலி இருந்தால் பயிற்சியை நிறுத்திவிட்டு வைத்தியரைப் போய்ப்பாருங்கள்.
வாக்கிங் போறபோது உங்கள் சக்திக்குத் தகுந்த மாதிரி மெதுவாக அதிக கஷ்டமில்லாமல் முன்னேறுங்கள் சேர். அங்கே என்ன போட்டியா வைக்கிறார்கள். முந்திக் கொண்டு போய் பரிசு வாங்குவதற்கு. தொந்தரவு கொடுக்காத ஷு, ட்ரெஸ் இவற்றை உபயோகப்படுத்துங்கள்.
பாதத்திலே உள்ள தசையிலே ஏதாவது பிரச்சினை இருந்தால் வைத்தியரைப் பாருங்கள். வெயில் காலமாக இருந்தால் தலைக்குத் தொப்பி வைத்துக் கொள்ளுங்கள். பனியிலே நடந்தாலும் அப்படித்தான். தலையைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். எங்களிடம் ஏதோ கொஞ்சம் உருப்படியாகத் தெரியிறது அது தான். உடற்பயிற்சிக்கு முன்பு, பின்பு, பயிற்சி செய்கின்ற போது நிறைய தண்ணீர் குடிக்கலாமாம்.
முதல் ஒரு மாதத்திற்கு கொஞ்சம் தளர்த்தியா. சாவகாசமாக நடக்கலாம். மணிக்கு 3 அல்லது 4 கிலோமீற்றர் வேகம் என்று வைத்துக் கொள் ளுங்கள். அதற்குப் பிற்கு வேகத்தை அதிகப்படுத்தலாம். மணிக்கு 6 அல்லது 8 கிலோ மீற்றர் அளவுக்கு நடக்கலாம். நல்லா கையை வீசிக் கொண்டு நடக்க வேணும். மூச்சுவிடுகின்ற எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இது மாதிரி ஒரு 30 நிமிடம் நடக்கலாம்.
தனியாக நடந்து போவதற்கு உங்களுக்கு வெட்கமாக இருக்கிறதா? கூட யாரையாவது சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு குழுவாகக் கூடப் போகலாம். நடக்கிறதை ஒரு சந்தோஷமான சமாச்சாரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். தினம் இப்படி நடக்க வேண்டியிருக்கே என்று புலம்பிக் கொண்டே போகாதீர்கள்.சில பேர் நடக்கிறபோது கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டே போவார்கள். சில பேர் வருங்காலத்தை அசைபோட்டுக் கொண்டே போவார்கள். சிலபேர் முக்கியமான திட்டமெல்லாம் இப்படி நடக்கிறபோது தான் தீர்மானம் செய்கின்றார்கள்.
நடக்கிறதினாலே மன இறுக்கம் குறையுது. பரபரப்பு குறைகிறது. மன ஆற்றல் பெருகுது. தன்னம்பிக்கை வளர்கிறது. முதுமை தள்ளிப் போகிறது. செயற்றிறன் அதிகரிக்கின்றது. இதைத் தவிர உடம்புக்கும் பலவிதமான சௌகரியங்கள் ஏற்படுகின்றது.
சார்லஸ் லேம்ப்-ஆங்கில இலக்கிய மேதை. அவர் ஒருதரம் உடம்பு சரியில்லை என்று வைத்தியரிடம் சென்றாராம். வைத்தியர் அவரைப் பார்த்துவிட்டு நீங்கள் தினமும் காலையிலே வெறும் வயிற்றிலே நடக்க வேணும் அப்படி என்றாராம்.வெறும் வயிற்றிலே நடக்கிறதற்கு நான் தயார் ஆனால் வயிறு கிடைக்கவேணுமே. யார் வயிற்றிலே நடக்கிறது வைத்தியர் என்று கேட்டாராம் இவர்.