வாடிக்கையாளரைக் கவர்வது எப்படி? – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
எனக்கு அதிஷ்டமே இல்லை சேர் என்றார் ஒருவர். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன். வியாபாரம் செய்யலாம் என்று ஒரு கடை வைத்தேன் சேர். வேண்டப்பட்டவன் கூட என் கடையிலே வந்து எதுவும் வாங்கமாட்டேன் என்கின்றான். எல்லோரும் அடுத்த கடைக்குத்தான் போகிறார்கள் என்று சொல்லி மிகவும் அலுத்துக்கொண்டார்.
இதற்கு போய் அதிஷ்டம் இல்லை என்று சொல்கிறீர்களே. வாடிக்கையாளரைக் கவர்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை அதுதான் குறை என்றேன். சேர் உங்களுக்குத் தெரிந்தால் அந்த இரகசியத்தை எனக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் என்றேன். சரி உங்கள் காதை இப்படிக் கொஞ்சம் கொடுங்கள் என்று சொல்லி ஆரம்பித்தேன். கடை வைத்திருப்பவர்கள் எல்லோரும் இதைக் கொஞ்சம் காதிலே வாங்கிக் கொள்ளுங்கள். எப்பவும் பணத்தை சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது.
அதைவிட முக்கியமாக நீங்கள் சம்பாதிக்க வேண்டியது வாடிக்கையாளர்களின் மனநிறைவு! வருபவர்கள் திருப்தியோடு போக வேண்டும். அது முக்கியம். அதிலே கவனமாக இருக்க வேண்டும். கடைக்கு வரும் ஒருவர் ஏதாவது ஒரு குறை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. மிகவும் அக்கறையோடு அதைக் காது கொடுத்து கேட்க வேண்டும்.
அப்படியா சேர் அதை நான் அவசியம் கவனிக்கிறேன் என்று சொல்லவேண்டும். ஒருவர் வருகிறார். சேர் நேற்று உங்கள் கடையிலே இதை நான் வாங்கிக் கொண்டு போனேன். வீட்டில் இதை வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லி திருப்பிக் கொடுக்கிறார். உடனே நீங்கள் முகம் சுழிக்கக் கூடாது. எரிச்சல் படக்கூடாது. வழக்கம் போல நிதானமாக முகமலர்ச்சியோடு அதைத் திருப்பி வாங்குங்கள்!இவ்வளவு பணத்திற்குப் பொருட்கள் வாங்கினால் இந்நக் கரண்டி அன்பளிப்பு! இப்படி ஏதாவது கொடுக்கலாம்.
பண்டிகைக் காலங்களிலேயும் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இப்படி ஏதாவது பொருத்தமாக ஒரு அன்பளிப்பு கொடுக்கலாம். நீங்கள் கொடுப்பது ஒரு சர்வ சாதாரணமான பொருளாக இருந்தாலும் அது வாங்குபவர் மனதிலே ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதுவும் உங்களால் கொடுக்க முடியவில்லை என்றால் உங்கள் முகம் நிறைந்த சிரிப்பையாவது கொடுங்கள் அது போதும். உங்கள் கடையிலே இல்லாத ஒரு பொருளை வாடிக்கையாளர் வந்து கேட்கிறார். உடனே இல்லை! என்று முகத்திலே அடித்தது போல சொல்லிவிடாதீர்கள்.
கொஞ்சம் உட்காருங்கள் சேர் என்று சொல்லி உங்கள் பணியாளர் யாரையாவது அனுப்பி வெளியிலேயிருந்து வாங்கி வரச்சொல்லி அவரிடம் கொடுங்கள். சிலபேர் உங்கள் கடைக்கு வரும் பொழுது அவர் வீட்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும். அந்தக் குழந்தைகளை முதலிலே கவனிக்க வேண்டும். அதன் கன்னத்தைக் கிள்ள வேண்டும். அதனிடம் விளையாட வேண்டும். அதற்கு ஏதாவது மிட்டாய், பிஸ்கட் கொடுத்து அதன் கவனத்தைக் கவர வேண்டும். அதன் பிறகு தான் பெரியவர்களைக் கவனிக்க வேண்டும்.
உங்கள் கடையிலே வேலை செய்யும் பணியாளர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். சிரித்த முகம், சுறுசுறுப்பு இது இரண்டும் அவர்களுக்குத் தேவை அழுது வடிந்து கொண்டு இருக்கக்கூடாது. இன்னுமொரு விடயம். அதிகமாக பொருள் வாங்கும் ஒருவரிடம் அதிக மரியாதையும் குறைவான பொருள் வாங்குபவர்களிடம் வேறு விதமாகவும் நடந்துகொள்ளக்கூடாது.
5 ரூபாய்க்கு வாங்கினாலும் சரி 500 ரூபாய்க்கு வாங்கினாலும் சரி அவர்களிடம் நீங்கள் காட்டுகின்ற மரியாதையிலே வித்தியாசம் இருக்கக் கூடாது.எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் கடையிலே ஒரு பொருள் வாங்கினால் அது உண்மையானதாகவும் தரமானதாகவும் இருக்கும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும். அதனாலே தரமான பொருட்களையே நீங்கள் உங்கள் கடையில் வைத்திருங்கள்.
இதுவரைக்கும் நான் சொல்லியவற்றை கவனத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் கடையை ஆரம்பித்தால் வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகவில்லை என்றால் அதன் பிறகு என்னிடம் கேளுங்கள்.
இந்த யோசனைகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு விடயம் உண்டு. அது என்ன என்று தெரிந்து இதைக் கேளுங்கள். என்னுடைய நண்பர் ஒருவர் வந்தார். சேர் உங்கள் யோசனையைக் கேட்டதனாலே நான் ஒரு அறை வாங்கியதுதான் மிச்சம் என்றார்.
என்ன ஆச்சு? என்று கேட்டேன். எங்கள் கடைக்கு ஒரு அம்மா குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தார். உங்கள் யோசனைப்படி அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். திடீரென்று அந்தக் குழந்தை தலையைக் குனிந்துவிட்டது. என் கை குழந்தையின் கன்னத்திற்குப் பதிலாக அதைத் தூக்கி வந்த அம்மா கன்னத்தைக் கிள்ளி விட்டது. அது தான் இப்படி ஆகிவிட்டது என்றார் கன்னத்தைத் தடவிக்கொண்டு.