அளவு கடந்த அன்பு! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
உங்கள் மேலே எனக்கு அளவு கடந்த அன்பு என்று யாராவது சொன்னால் அதை அலட்சியமாக நினைக்கக்கூடாது. அது சீரியஸான விடயம்.
அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே இடைஞ்சல் தானே. அன்பும் அப்படித்தான். அன்பு அதிகமாக இருந்தால் அது எப்போதும் உங்களுக்கு கெடுதல் செய்யும் என்கின்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.தசரதன் கதை என்ன ஆனது? கைகேயி மேல் வைத்த அளவு கடந்த அன்பு ராமன் காட்டுக்குப் போகும்படி ஆகிவிட்டது.
தசரதன் எப்பேற்பட்ட அரசன், விஸ்வாமித்திரர் சொல்கிறார். (கம்பராமாயணம்) என்னை மாதிரி முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் ஏதாவது கஷ்டம் வந்தால் முதலில் முருகனிடம் போவோம். அதன்பின் பரமசிவனிடம் போவோம். அதன் பின்பு திருமாலிடம் போவோம். பின்பு பிரம்மன், இந்திரன் இவர்களைப் போய்ப் பார்ப்போம். இவர்களால் எல்லாம் முடியவில்லை என்றால் அயோத்திக்கு வருவோம் என்கிறார். உன்னை விட்டால் வேறு கதி உண்டா என்று தசரதனைப் பார்த்து விஸ்வாமித்திரரே சொல்கிறார்.
அப்பேற்பட்ட அரசன் – தசரதன் கைகேயி காலில் விழுகிறான். உன் பாதங்களைத் தொட்டு கெஞ்சிக் கேட்கிறேன் இராமனைக் காட்டுக்கு அனுப்பாதே என்றான். தசரதனுடைய இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் கைகேயி மேலே வைத்த அளவு கடந்த அன்புதான் காரணம்.
இப்போது சொல்லுங்கள் அன்பாக இருந்தாலும் அது அளவுக்கு மீறிப் போனால் கெடுதல் செய்யுமா? செய்யாதா? அது மட்டுமில்லை அளவு கடந்த அன்பு நீதிக்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களையும் செய்ய வைத்துவிடும்.
தசரதன் மிகச் சிறந்த நீதிமான். தர்மத்துக்கு விரோதமாய் ஒரு காரியமும் செய்யாதவன். அப்பேற்பட்டவன் தன் மனைவியைப் பார்த்து என்ன சொல்கிறான் தெரியுமா? உனக்காக நான் என்ன செய்ய வேண்டும் சொல் செய்கிறேன். ஒரு குற்றமும் செய்யாத ஒருவனைக் கொல்ல வேண்டுமா? கொல்கிறேன்! மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனை விடுதலை செய்யச் சொல்கிறியா செய்கிறேன்!எந்தப் பிச்சைக்காரனையாவது கோடீஸ்வரன் ஆக்கச் சொல்கிறாயா? ஆக்குகிறேன்! அல்லது கோடீஸ்வரைனை பிச்சைக்காரனாக ஆக்கவேண்டுமா ஆக்குகிறேன் என்கிறார்.
நீதிக்கு விரோதமான இந்தப் பாவங்களைச் செய்வதற்கு அப்பேற்பட்ட அரசன் எப்படித் துணிந்தான்! மனைவியிலே வைத்த அளவு கடந்த அன்புதான் காரணம்.
திரிசூலம், வஜ்ராயுதம், வாள் இதுகளாலே தாக்கப்பட்டால் கூட அதையெல்லாம் பெரிதாக எண்ணாத ஒருவன் காமதேவனுடைய மலர் விழுந்து விடுகிறான். அம்புகள் தாக்கினால் அதை அவனாலே தாக்குப்பிடிக்க முடிவதில்லை
காமதேவனுக்கு உள்ள மகிமையே அதுதான் என்கிறார் துளசிதாசர். அதனாலே தான் பெரியவர்களெல்லாம் என்ன சொல்கிறார்கள் என்றால் எதையும் அளவுக்கு மீறி செய்யாதே என்கிறார்.
அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் எல்லோர் மீதும் அன்பு அவசியம் தான். ஆனால் அந்த அன்பு அறிவுக்குப் புறம்பாக இருக்கக்கூடாது. அளவுக்கு மீறியும் இருக்கக்கூடாது. அப்போதுதான் வாழ்க்கை சுகமாக இருக்கும். இல்லை என்றால் அவஸ்தை தான்!
அளவுக்கு மீறிய அன்பு புரிகிறது அது சரி.அறிவுக்கு புறம்பான அன்பு என்பது எப்படி? ஒரு தாய்க்கு ஜலதோசம் அல்லது ஏதோ ஒரு தொற்று நோய் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த அம்மாவுக்கு தன் குழந்தைகள் மேலே அளவு கடந்த அன்பு. தனக்கு நோய் இருக்கிறது. அது அடுத்தவர்களுக்குத் தொற்றக்கூடாது என்று தெரிந்திருந்தும் தாய் குழந்தை மீது அன்பைக் காட்டுவதற்காக அந்தக் குழந்தை முத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமா? இதுதான் அறிவுக்குப் புறம்பான அன்பு.
அதுமாதிரி விலங்குகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதற்காக புலிக்கு முத்தம் கொடுக்க முடியுமா?அப்படிக் கொடுத்தால் அது அறிவுக்குப் புறம்பான அன்பு. அதனாலே அன்புகூட அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.
இந்தக் காலத்து காதலன் தன் காதலியிடம் சொன்னான். இதோ பார் உன் மேலே எனக்கு அளவு கடந்த அன்பு. உனக்காக என்ன செய்ய வேண்டும் சொல் என்றான். நெருப்பிலே நடக்க வேண்டுமா? நடக்கிறேன். நீரிலே குதிக்க வேண்டுமா? குதிக்கிறேன். உயிரையே கொடுக்க வேண்டுமா கொடுக்கிறேன் என்றான். சரி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இதே இடத்திற்கு வா என்றாள் அந்தப் பெண். இவன் கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு அன்றைக்கு மழை பெய்யாமல் இருந்தால் வந்து விடுகிறேன் என்றான்.
