இன்று ஒரு தகவல் 1 – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஞாபகம்
ஒரு நண்பர் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தார். அவர் பேசி முடித்ததும் நான் அவரைப் பார்த்து இப்போது போன் செய்தீர்களே அந்த போன் நம்பர் என்ன என்று கேட்டேன்.
அவர் தலையைச் சொறிந்து கொண்டார். ஞாபகம் வரவில்லை. சரி அதை விடுங்கள் உங்கள் மனைவி பெயர் என்ன? என்று கேட்டேன். மாலதி என்றார்.
என்ன சேர் இது வேடிக்கை. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பேசிய நம்பர் மறந்து போய்விட்டது. எப்பவோ கல்யாணம் செய்த மனைவி பெயர் மறக்கவில்லை. அதைச் சரியாக சொல்லி விட்டீர்கள் என்றேன்.
அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அவர் என்னை அப்படி பார்த்ததில் தப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் எல்லோரும் அப்படித்தான். ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக போன் செய்கிறோம் அதற்குப் பிறகு அந்த நம்பர் அநாவசியம். அதனாலே மறந்து விடுகிறோம். இதற்குப் பெயர் தற்காலிக ஞாபகம்.
ஆனால் மனைவி பெயரை மறந்துவிட முடியுமா? முடியாது. அது அவசியமான ஒன்று. அடிக்கடி அந்தப் பெயரை உபயோகப்படுத்துகிறோம். அதனாலே அது முக்கியம். அதை மறப்பதில்லை. இதற்குப் பெயர் நிரந்தர ஞாபகம்.
சரி இந்த தற்காலிக ஞாபகம், நிரந்தர ஞாபகம் இந்த இரண்டு ஞாபக அளவுகளையும் கட்டுப்படுத்துவது எது. மூளைக்குள்ளே நடக்கிற மின்சார நடவடிக்கைகள் தான். தற்காலிக ஞாபகம் ஒரு மின்னல் மாதிரித் தோன்றி மறையுது! நிரந்தர ஞாபகம் ஒரு படிவம் போல மூளையிலே படிந்துவிடும்.
ஒரே சம்பவத்தின் பல பிரதிகள் மூளையிலே பல்வேறு பகுதிகளிலேயும் படிவதாலே ஒன்று மறைந்தாலும் இன்னொன்று மறைவதில்லை.
இப்படிப்பட்ட நிலைமையிலே தான். தொண்டையிலே இருக்கு. வாய்க்கு வரமாட்டேன் என்கிறது சேர் என்பர்.
ஒருத்தருக்கு எந்தத் துறையிலே ஆர்வமும் ஈடுபாடும் அதிகமோ அது சம்பந்தமான ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். தொழிலை விரும்பும் ஒரு போன் ஆப்பரேட்டருக்கு எண்கள் எல்லாம் ஞாபகம் இருக்கும்.
அதுமாதிரி கவிஞர்களுக்கு வார்த்தைகள் நல்லா ஞாபகத்திலே இருக்கும். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு மூளை எண்களைவிட எழுத்துக்களை விட படங்களை மிகவும் சுலபமாக ஞாபகத்திலே வைத்திருக்கிறது. புரிந்துகொள்ளுற தன்மை, அனுபவம், புத்திக்கூர்மை இது கூடிக்குறைவதை பொறுத்து ஞாபக சக்தியும் ஏறும் இறங்கும். இப்போது உதாரணத்திற்கு.. ஒரு பையனுக்கு படித்தது எதுவும் ஞாபகத்திலே நிற்பது இல்லை அவன் அதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.
இந்த மறதி எந்த சமயத்திலே ஒரே பிரச்சினையாக ஆகுது தெரியுமா? உங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கடற்கரைக்கு வரச்சொல்லிவிட்டு. அந்த நேரத்தை மறந்து விட்டால் அது பரவாயில்லை! வரச் சொன்னதையே மறந்துவிட்டால்தான் நிலைமை மோசம் என்று அர்த்தம். இப்படி இருந்தால் இது சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். – தென்கச்சி கோ.சுவாமிநாதன்